மனைவிக்கு 'சீட்' வேண்டாம் காங்., - எம்.எல்.ஏ., 'கும்பிடு'
மனைவிக்கு 'சீட்' வேண்டாம் காங்., - எம்.எல்.ஏ., 'கும்பிடு'
ADDED : பிப் 10, 2024 06:02 AM

'லோக்சபா தேர்தலில் எனது மனைவிக்கு 'சீட்' தருவதாக, தலைவர்கள் கூறினர். வேண்டாம் என்று கூறிவிட்டேன்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் கூறியுள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில், துமகூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ராஜண்ணா அல்லது முன்னாள் எம்.பி., முத்தேஹனுமேகவுடா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி அந்த தொகுதியில், குப்பி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் மனைவியை களமிறக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து சீனிவாஸ் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் துமகூரில் போட்டியிட, எனது மனைவிக்கு அழைப்பு வந்தது உண்மை தான். எங்கள் கட்சியின் தேசிய, மாநில தலைவர்கள் என்னிடம் பேசினர். ஆனால் எனது மனைவிக்கு 'சீட்' வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
இதுகுறித்து விவாதம் ஒரு அறையில் நடந்தது. அங்கு ஒரு சிலர் தான் இருந்தனர். நாங்கள் பேசியது எப்படி வெளியானது என்பது தெரியவில்லை.
கடந்த 25 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். குடும்ப பொறுப்புகளை மனைவி தான், தோளில் சுமக்கிறார். அவருக்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. துமகூரில் யார் போட்டியிட்டாலும், அவரை வெற்றி பெற வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -