குடிப்போதையில் கதவை தட்டிய காங்., நிர்வாகிகள்: பதவி விலகிய பெண் நிர்வாகி "பகீர்"
குடிப்போதையில் கதவை தட்டிய காங்., நிர்வாகிகள்: பதவி விலகிய பெண் நிர்வாகி "பகீர்"
UPDATED : மே 07, 2024 12:35 PM
ADDED : மே 07, 2024 09:30 AM

ராய்ப்பூர்: ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு பங்கேற்க சென்ற போது காங்., நிர்வாகிகள் குடிபோதையில் கதவை தட்டியதாக, பதவி விலகிய காங்கிரஸ் நிர்வாகி ராதிகா கேரா பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் ராதிகா கேரா, பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் கட்சியில் இருக்கும் போது தனக்கு நேர்ந்த துயரங்களை எடுத்துரைத்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைமை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ராதிகா கேரா முன் வைத்துள்ளார்.
காங்கிரசின் ஹிந்து விரோத சித்தாந்தம்
இது குறித்து அவர் கூறியதாவது: ராகுலின் பாரத் ஜோடாே யாத்திரையின் போது, சத்தீஸ்கர் மாநில காங்., ஊடக தலைவர் சுஷில் ஆனந்த் சுகா என்னை மது அருந்த வைத்தார். அவர் கட்சிக்காரர்களுடன் குடிபோதையில் எனது அறையின் கதவை தட்டினார்.
நான் பயந்து, கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் இடம் தகவல் தெரிவித்தேன். அவர்கள் நடவடிக்கை எதும் எடுக்கவில்லை. ஆனால் அன்று அதிர்ஷ்டவசமாக தப்பினேன். காங்கிரஸ் கட்சியின் ஹிந்து விரோத சித்தாந்தத்தை நான் பின்பற்றாத காரணத்தால் புறக்கணிக்கப்பட்டேன்.
தவறாக நடக்க முயற்சி
கடந்த 30ம் தேதி அன்று மாலை, மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் சுஷில் ஆனந்த் சுக்லாவிடம் பேச சென்ற போது, அவர் என்னைத் மிகவும் மோசமாக திட்டினார். அவர்கள் என்னை ஒரு அறையில் உள்ளே அடைத்து மற்ற இரண்டு மாநில செய்தித் தொடர்பாளர்களுடன் சேர்ந்து என்னிடம் தவறாக நடக்க முயன்றார். நான் கூச்சலிட்டும், யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். இது குறித்து கட்சி தலைமையிடம் புகார் அளித்து எந்த பயனும் இல்லை.
சனாதன எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சியானது ராமர், சனாதன எதிர்ப்பு, ஹிந்து விரோதம் என்று எப்பொழுதும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை நான் நம்பவே இல்லை. தற்போது தான் காங்கிரசின் உண்மையான முகத்தை பார்த்தேன். அயோத்தி ராமர் கோயிலுக்கு நான் சென்றேன். பின்னர் என் வீட்டு வாசலில் 'ஜெய் ஸ்ரீராம்' என்கிற வாசகத்துடன் காவி கொடியை வைத்தேன். இதனை புகைப்படம் மற்றும் எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டேன். நீ எதற்காக கோயிலுக்கு சென்றாய் என கட்சி நிர்வாகிகள் கேள்வி மேல் கேள்வி கேட்டு என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.,வில் ஐக்கியம்
காங்கிரஸ் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டிய ராதிகா கேரா, அக்கட்சியில் இருந்து விலகி, இன்று பா.ஜ.,வில் இணைந்தார். 'காங்கிரசில் இருந்தபோது நான் ஹிந்துவாக இருப்பதால் தண்டிக்கப்பட்டேன்' எனவும் குற்றம் சாட்டினார்.