ADDED : டிச 06, 2024 06:43 AM
துமகூரு: முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட துாண்டிய பா.ஜ., -- எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா மீது நடவடிக்கை எடுக்க கோரி, காங்கிரஸ் புகார் செய்துள்ளது.
துமகூரில் கடந்த 2ம் தேதி பல்வேறு வளர்ச்சி பணிகளை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்பாக, முதல்வர் வருகைக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை தரப்படும் என, துமகூரு டவுன் பா.ஜ., -- எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா பேசிய மொபைல் ஆடியோ வெளியானது.
இந்நிலையில், நேற்று கர்நாடக காங்கிரஸ் பொது செயலர் சூர்யா முகுந்த ராஜ், துமகூரு எஸ்.பி., அசோக்கிடம் அளித்த புகாரில், 'முதல்வரின் வருகையை சீர்குலைக்கும் வகையிலும், கருப்பு கொடி காட்டி கலவரத்தை துாண்டி விடவும் பா.ஜ., -- எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா முயற்சி செய்துஉள்ளார்.
'அரசின் திட்டங்களை சீர்குலைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். தீய நோக்கத்துடன் அவர் செயல்பட்டு உள்ளது தெளிவாக உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.