ஆசிரியையிடம் அத்துமீறியதாக வழக்கு காங்கிரஸ் பொதுச்செயலர் 'டிஸ்மிஸ்'
ஆசிரியையிடம் அத்துமீறியதாக வழக்கு காங்கிரஸ் பொதுச்செயலர் 'டிஸ்மிஸ்'
ADDED : டிச 01, 2024 04:12 AM

பெங்களூரு: ஆசிரியையிடம் அத்துமீறியதாக பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, கர்நாடக காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் குரப்பா நாயுடு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலராக இருந்தவர் குரப்பா நாயுடு. இவர் தியாகராஜநகரில் உள்ள பி.ஜி.எஸ்., ப்ளூம் பீல்டு பள்ளியின் தலைவராவார்.
இப்பள்ளியில் 38 வயதுள்ள ஒரு பெண் ஆசிரியை, 2021 மார்ச் முதல் 2023 ஆகஸ்ட் வரை பணியாற்றினார்.
இந்த ஆசிரியையை, தன் அலுவலகத்திற்கு அடிக்கடி வரவழைத்து, குரப்பா நாயுடு அத்துமீறி நடந்துள்ளார். அதை வீடியோவும் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிரியை எதிர்ப்புத் தெரிவித்தபோது, ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது பற்றி வெளியில் கூறினால், 'உன் அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவேன்' என மிரட்டினாராம்.
இதுபோன்று பள்ளியில் வேலை செய்யும், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள பல ஆசிரியைகளிடம் அத்துமீறியதாக, நவ., 26ம் தேதி, சி.கே.அச்சுகட்டு போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியை புகார் செய்தார்.
இதையடுத்து குரப்பா நாயுடு மீது, பாலியல் துன்புறுத்தல், குற்றவியல் மிரட்டல், பெண்ணை அவமதித்தல், பெண் மீது தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து குரப்பா நாயுடு கூறுகையில், ''இது ஒரு பொய் வழக்கு. எந்த ஒரு ஆதாரமுமின்றி, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, நான், பள்ளிக்கு எப்போதாவது தான் செல்வேன்,'' என்றார்.
இந்த வழக்கு குறித்து, தெற்கு மண்டல போலீஸ் டி.சி.பி., லோகேஷ் ஜகலசூர் விசாரணை நடத்துகிறார். அரசியல் வட்டாரங்களில் இவ்வழக்கு பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று, கே.பி.சி.சி., ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் ரஹ்மான்கான் கூறுகையில், ''பாலியல் வழக்கில் சிக்கியுள்ள குரப்பா நாயுடு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
''அடுத்த ஆறு ஆண்டுகள் அவருக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை,'' என்றார்.

