சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு புறக்கணித்தது காங்., அரசு: பிரதமர் மோடி
சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு புறக்கணித்தது காங்., அரசு: பிரதமர் மோடி
ADDED : நவ 16, 2024 12:06 AM

ஜமூய்: “சுதந்திர போராட்டத்தில் பழங்குடியின சமூகத்தினரின் பங்கை, மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த முந்தைய அரசுகள் புறக்கணித்தன,” என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
பீஹாரில், பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் 150வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நிதீஷ் குமார், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழங்குடியினர் கவுரவ தின விழாவான இதில், 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்.
வேலைவாய்ப்பு
அப்போது அவர் பேசியதாவது:
ஆதிவாசி சமூகத்தை நான் பெரிதும் மதிக்கிறேன்; வணங்குகிறேன். ஆகையால்தான், பிர்சா முண்டாவின் பிறந்த நாளை பழங்குடியினர் கவுரவ தினமாக கொண்டாட விரும்பினேன்.
பழங்காலத்தில் இருந்தே நாட்டின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் பழங்குடியினர் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினர் பங்கை யாராலும் மறக்க முடியாது. ஆனால், முந்தைய அரசுகள் வேண்டுமென்றே இந்த உண்மையை மறைத்தன.
இதனால், எல்லா புகழும் ஒரு கட்சிக்கும், அதை நடத்தும் குடும்பத்துக்கும் அளிக்கப்பட்டது.
ஒரு கட்சிக்கும், அதைச் சார்ந்த குடும்பத்துக்கும் மட்டுமே இதற்கான பயன் கொடுக்கப்பட்டால், பிர்சா முண்டா, தில்கா மாஞ்சி போன்ற பழங்குடியின தலைவர்களை யார் நினைவில் கொள்வர்? பழங்குடியினரின் பிரச்னைகள் குறித்து மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த முந்தைய அரசுகள் எப்போதும் கவலைப்பட்டதில்லை.
பழங்குடியினருக்கு சிறந்த கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றை வழங்குவதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. பழங்குடியினர் நலனுக்கான பட்ஜெட் 25,000 கோடி ரூபாயாக இருந்த நிலையில், அதை 1.25 லட்சம் கோடி ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
அவர்களின் சிரமத்தை மனதில் வைத்தே, 24,000 கோடி ரூபாய் மதிப்பில், 'பிரதமர் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான்' திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை
பழங்குடியினரின் கலாசாரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவர்கள் பின்பற்றி வரும் பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆதரிக்கும் வகையில், நாடு முழுதும் 700 ஏகலைவா பள்ளிகளை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் வாயிலாக, அந்த சமூகத்திற்கு மிகப்பெரிய உதவி கிடைக்கும் என நம்புகிறோம். ஆதிவாசி குடும்பங்கள் தங்கள் சுகாதாரத் தேவைகளுக்காக நீண்ட துாரம் பயணிக்கும் நிலையைத் தடுக்கும் வகையில், ஏராளமான ஆயுஷ்மான் மருத்துவமனைகள் அமைக்கப்படவுள்ளன.
நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதியாக திரவுபதி முர்முவை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைத்ததை, தேசிய ஜனநாயக கூட்டணி அதிர்ஷ்டமாக கருதுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.