கல்லட்கா பிரபாகர் பட்டுக்கு முன்ஜாமின் வக்கீலை அதிரடியாக நீக்கியது காங்கிரஸ்
கல்லட்கா பிரபாகர் பட்டுக்கு முன்ஜாமின் வக்கீலை அதிரடியாக நீக்கியது காங்கிரஸ்
ADDED : ஜன 20, 2024 06:02 AM
மாண்டியா: மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணாவில், டிசம்பர் 24ல் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் பங்கேற்றிருந்தார். அப்போது உரையாற்றிய அவர், 'முஸ்லிம் பெண்களுக்கு, நிரந்தரமான கணவர் இருக்கவில்லை. இவர்களுக்கு நிரந்தர கணவர் கிடைக்க செய்தது, பிரதமர் மோடி' என கூறினார்.
இதுகுறித்து, ஸ்ரீரங்கபட்டணா போலீஸ் நிலையத்தில், காங்கிரசின் சிலர் புகார் அளித்தனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி, ஸ்ரீரங்கபட்டணாவின் மூன்றாவது மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் கல்லட்கா பிரபாகர் பட், மனுத் தாக்கல் செய்திருந்தார்.
கல்லட்கா பிரபாகர் தரப்பில் ஆஜரான வக்கீல் சந்திரேகவுடா, நீதிமன்றத்தில் வாதிட்டு முன்ஜாமின் கிடைக்க செய்தார். 2 லட்சம் ரூபாய் பத்திரம், இருவரது உத்தரவாதத்துடன், நீதிமன்றம் நேற்று முன்தினம் கல்லட்கா பிரபாகருக்கு முன்ஜாமின் வழங்கியது.
இவருக்கு ஆதரவாக வாதிட்ட வக்கீல் சந்திரேகவுடா, காங்கிரசை சேர்ந்தவர். ஸ்ரீரங்கபட்டணா தாலுகா காங்கிரசின் சட்டப்பிரிவு தலைவராக பதவி வகித்தார். முஸ்லிம் பெண்களை பற்றி, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கல்லட்கா பிரபாகருக்காக வாதாடி, முன்ஜாமின் பெற்றுத் தந்ததால், காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது.
சந்திரசேகரை சட்டப்பிரிவு தலைவர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கி, கர்நாடக காங்கிரஸ் கமிட்டி, நேற்று உத்தரவிட்டது.
வக்கீல் சந்திரேகவுடா கூறுகையில், “கல்லட்கா பிரபாகர் பட்டுக்கு எதிராக, புகார்தாரரின் சதி தோற்றுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான அம்சங்களின் உண்மை தன்மை குறித்து, விசாரணை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனவே நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கியது,” என்றார்.
சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றிய கல்லட்கா பிரபாகருக்கு, வக்கீல் சந்திரேகவுடா வாதாடி முன்ஜாமின் பெற்றுத் தந்தது, கட்சியின் சட்டப்பிரிவு விதிகள், கட்டுப்பாடுகளுக்கு எதிரானது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, கட்சியில் இருந்து நீக்கினோம்.
- ஏ.எஸ்.கவுரி சங்கர்,
தலைவர், மாநில காங்., சட்டப்பிரிவு