பிரித்தாளும் சூழ்ச்சியில் காங்கிரஸ்; மக்களுக்கு பிரதமர் மோடி வார்னிங்
பிரித்தாளும் சூழ்ச்சியில் காங்கிரஸ்; மக்களுக்கு பிரதமர் மோடி வார்னிங்
ADDED : நவ 09, 2024 10:26 PM

நந்தீத்: ஓ.பி.சி., எனும் மிகப்பெரிய சமூகத்தை உடைத்து, சிறு சிறு வகுப்புகளாக பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலையொட்டி மஹாராஷ்டிராவில் சூறாவளி பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.
இன்று நந்தீத் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார்.
அவர் கூறியதாவது: அரசியல் ஆதாயத்திற்காக ஓ.பி.சி., பிரிவினரை பிரிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஓ.பி.சி., பிரதமரை காங்கிரஸால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்களுடன் மக்களாக ஓ.பி.சி., பிரதமர் இருப்பதை காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
ஓ.பி.சி., எனும் மிகப்பெரிய சமூகத்தை உடைத்து, சிறு சிறு வகுப்புகளாக பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்கள் ஒற்றுமையாக இருந்தால் தான், நாம் பாதுகாப்பாக இருக்க முடியும், எனக் கூறினார்.