மேலிடத்தின் கையில் காங்., தலைவர் மாற்றம் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி திட்டவட்டம்
மேலிடத்தின் கையில் காங்., தலைவர் மாற்றம் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி திட்டவட்டம்
ADDED : ஜன 02, 2025 06:29 AM

பெலகாவி: ''மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில், தற்போது இருப்பவர் நீடிப்பதா அல்லது புதியவருக்கு வாய்ப்பளிப்பதா என்பது குறித்து, கட்சி மேலிடமே முடிவு செய்யும். அது நாங்கள் முடிவு செய்யும் விஷயம் அல்ல,'' என, மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கட்சியில் சிலர் இரண்டு பதவிகளை வைத்துள்ளனர். இரண்டு பொறுப்புகளை நிர்வகிப்பது கஷ்டம். இது பற்றி நாங்கள் முடிவு செய்ய முடியாது. மாநில காங்கிரஸ் தலைவரை மாற்றுவது குறித்து முடிவு செய்யும் அதிகாரம், கட்சி மேலிடத்துக்கு மட்டுமே உள்ளது.
பெலகாவி மாவட்ட தலைவர் நியமனம் விஷயத்தில், அனைவரும் இணைந்து ஆலோசித்து, கட்சிப் பணிக்கு யார் அதிக நேரம் ஒதுக்குகிறாரோ, அவரது பெயரை சிபாரிசு செய்துள்ளோம். அவரையே தலைவராக மேலிடம் நியமிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
இரண்டு பதவிகள்
பெலகாவி மற்றும் சிக்கோடி மாவட்ட தலைவர்கள், இரண்டு பதவிகளில் உள்ளனர். அவர்களை மாற்ற முடிவு செய்துள்ளோம். பெலகாவி மாவட்ட தலைவர் பதவிக்கு, மிருணாள் ஹெப்பால்கரை நியமிப்பது குறித்து, இன்னும் ஆலோசிக்கவில்லை.
கட்சித் தலைவராக இருப்பவர், காங்கிரஸ் அலுவலகத்தில் அதிக நேரம் இருக்க வேண்டும். கட்சியை பலப்படுத்த அதிக நேரம் ஒதுக்க வேண்டும். தொண்டர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். தலைவராக இதுவே நெறிமுறையாகும்.
கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரம், முதல்வர் சித்தராமையாவுக்கு உள்ளது. ஏற்கனவே 70 சதவீதம் நியமனம் முடிந்துள்ளது. இன்னும் 30 சதவீதம் நியமனம் செய்ய வேண்டும்.
கார்ப்பரேஷன், வாரியங்களின் இயக்குனர், உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு மட்டும், எங்களுக்கு உள்ளது. உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையில் கமிட்டி உள்ளது. பகுதி, பகுதியாக நியமிக்கப்படும்.
ஒரு மித்த கருத்து
பெலகாவி மாவட்டத்தை பிரிப்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. பெலகாவி பெரிய மாவட்டம். இரண்டாக பிரிந்தால் நல்லது தான். இதற்கு ஒருமித்த கருத்து இருக்க வேண்டும்.
சி.டி.ரவி விவகாரத்தில், கவர்னரிடம் என்ன புகார் அளித்தனர் என்பது எங்களுக்கு தெரியாது. விசாரணை நடத்தட்டும். பெலகாவியில் தற்போதைக்கு எந்த அதிகாரிகளும் இடம் மாற்றப்படவில்லை. அனைவரும் நன்றாக பணியாற்றுகின்றனர்.
பெலகாவி கூட்டத்தொடரில், வட மாவட்டங்கள் குறித்து, அதிகம் ஆலோசனை நடத்தினோம். வரும் பட்ஜெட்டில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவோம். மாநிலத்தில் மழையால் பாலங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இம்முறை பட்ஜெட்டில் பாலங்கள் கட்ட, கூடுதல் நிதி ஒதுக்கப்படும். சாலைகள் அமைக்க எங்கள் துறைக்கு, முதல்வர் கூடுதலாக 4,000 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
இவ்வாறு அவர்கூறினார்.

