பெங்., வடக்கில் பெண் வேட்பாளர் பா.ஜ.,வுக்கு போட்டியாக காங்., ஆர்வம்
பெங்., வடக்கில் பெண் வேட்பாளர் பா.ஜ.,வுக்கு போட்டியாக காங்., ஆர்வம்
ADDED : மார் 16, 2024 10:43 PM
பெங்களூரு வடக்கு லோக்சபா தொகுதியில், ஷோபாவை பா.ஜ., களமிறக்கியதால், அவரை எதிர்த்து பெண் வேட்பாளரை களமிறக்க, காங்கிரஸ் விரும்புகிறது.
பெங்களூரு வடக்கு லோக்சபா தொகுதி, தற்போது பா.ஜ., வசம் உள்ளது. இதை தன் வசமாக்க வேண்டுமென, காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளது.
கடந்த 1951லிருந்து, பெங்களூரு வடக்கு தொகுதி, காங்கிரஸ் வசம் இருந்தது. 2004ல் பா.ஜ., கைப்பற்றியது. தற்போது இந்த தொகுதி, அக்கட்சியின் கோட்டை என்று கருதப்படுகிறது.
இதைத் தகர்த்து தொகுதியை பிடிப்பது, காங்கிரசுக்கு எளிதான விஷயமல்ல.
எனவே வலுவான வேட்பாளரையே களமிறக்க வேண்டும். முன்னாள் எம்.பி., ராஜேகவுடா, கோவிந்த்ராஜநகர் எம்.எல்.ஏ., பிரியா கிருஷ்ணா ஆகியோர் சீட் எதிர்பார்க்கின்றனர்.
பெங்களூரு வடக்கு தொகுதியில், பா.ஜ.,வுக்கு அதிகமான செல்வாக்கு உள்ளது என்றாலும், வேறு தொகுதியில் இருந்து வேட்பாளரை அழைத்து வந்து, களமிறக்குவதைத் தவிர்க்க முடியவில்லை.
இதற்கு முன்பு தட்சிண கன்னடா எம்.பி.,யாக இருந்த சதானந்தகவுடாவை, பெங்களூரு வடக்கில் களமிறக்கியது. இப்போது உடுப்பி - சிக்கமகளூரின் எம்.பி.,யானஷோபாவை களமிறக்கியுள்ளது.
இவரை எதிர்த்து பெண் வேட்பாளரை களமிறக்க, காங்கிரஸ் ஆலோசிக்கிறது. குஸ்மா ஹனுமந்தராயப்பாவுக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன- நமது நிருபர் -.

