UPDATED : பிப் 22, 2024 03:55 AM
ADDED : பிப் 22, 2024 01:07 AM

புதுடில்லி, வரி நிலுவை தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், வங்கிக் கணக்கில் இருந்து 65 கோடி ரூபாயை வருமான வரித் துறை எடுத்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சி, முந்தைய ஆண்டுகளில் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குகளில், 210 கோடி ரூபாய் அளவுக்கு முறையாக கணக்கு காட்டப்படவில்லை என வருமான வரித்துறை கூறியிருந்தது.
இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் அதன் இளைஞர் பிரிவின் சில வங்கிக் கணக்குகளை முடக்கி, வருமான வரித் துறை சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது.
இது தொடர்பாக விசாரித்த வருமான வரித் துறை தீர்ப்பாயம், முடக்கி வைக்கும் உத்தரவுக்கு தடை விதித்தது. அதே நேரத்தில், வழக்கு முடியும் வரை, இந்த வங்கிக் கணக்குகளில், 115 கோடி ரூபாய் வரை இருப்பு வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் பொருளாளர் அஜய் மாகன், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
வருமான வரிக் கணக்கு தொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், அதை மதிக்காமல், எங்களுடைய பல வங்கிக் கணக்கில் இருந்து, 65 கோடி ரூபாயை வருமான வரித் துறை எடுத்துள்ளது.
இது ஜனநாயகத்துக்கு எதிரானதாகும்; சட்டத்துக்கு புறம்பானதாகும். இது போன்ற மத்திய அரசு அமைப்புகளின் துஷ்பிரயோகங்களை கண்டுகொள்ளாமல் விட்டால், ஜனநாயகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும்.
நாட்டில் பல கட்சிகள் அரசியலில் இருப்பது பிடிக்காமல், ஒரு கட்சி அரசியல் இருக்க வேண்டும் என்பதற்காக, பழி வாங்கும் நடவடிக்கைகளில் மத்திய அமைப்புகள் ஈடுபடுத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.