காங்கிரஸ் ஹிந்துக்களுக்கு எதிரானதல்ல! அமைச்சர் தினேஷ் குண்டுராவ் விளக்கம்
காங்கிரஸ் ஹிந்துக்களுக்கு எதிரானதல்ல! அமைச்சர் தினேஷ் குண்டுராவ் விளக்கம்
ADDED : மார் 03, 2024 07:05 AM

மங்களூரு: ''சிறுபான்மையினருக்கு நிதி ஒதுக்குவதால், காங்கிரஸ் ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று அர்த்தமல்ல,'' என, சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். அதேவேளையில் ஹிந்து கோவில்கள் வளர்ச்சிக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். நாங்கள் ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றால், கோவிலுக்கு நிதி ஒதுக்குவோமா?
மாநிலத்தின் 3.70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 3,000 கோடி ரூபாய் மீனவர்கள், 39,000 கோடி ரூபாய் எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஹிந்துக்கள் இல்லையா?
எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, ஹிந்து அறநிலைய துறை நிதியை, மற்ற மதங்களுக்கு ஒதுக்கலாம் என்ற விதிமுறை இருந்தது. அதை காங்கிரஸ் நிறுத்தி, ஹிந்து கோவில்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் விதிமுறையை கொண்டு வந்தது. இது ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையா?
எங்கள் ஆட்சியில் பா.ஜ.,வை விட 18 சதவீதம் வரியை வசூலித்துள்ளோம். வாக்குறுதித் திட்டத்தில் எந்தவித முறைகேடும் இல்லாமல், பொதுமக்களுக்கு சென்றடைந்துள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.

