பா.ஜ.,வுக்கு எதிராக 'வலு' வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் காங்கிரஸ் திணறல்
பா.ஜ.,வுக்கு எதிராக 'வலு' வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் காங்கிரஸ் திணறல்
ADDED : பிப் 10, 2024 06:08 AM

லோக்சபா தேர்தலில், பா.ஜ., அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என கருத்து கணிப்புகள் வெளியானதால், கர்நாடக காங்கிரஸ் கிலியில் உள்ளது. வேட்பாளர்கள் தேர்வில் மாறுதல் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. யார், யார் என தேர்வு செய்வதில் திணறுகிறது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. தற்போது லோக்சபா தேர்தலுக்கு தயாராகிறது. முக்கிய தலைவர்கள் கட்சியை பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தலை போன்று, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியில் அமர வேண்டும் என்பது, காங்கிரசின் எண்ணமாகும்.
20 தொகுதி
கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக இருப்பதால், குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் இலக்கை எட்ட, திறமையான வேட்பாளர்களை தேடுவது, கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன், ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடந்த போது, எம்.பி.,க்கள் சிலரை பா.ஜ., களமிறக்கியது. இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தெறித்து ஓட்டம்
இதே யுக்தியை கையாள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. எட்டு, முதல் ஒன்பது அமைச்சர்களை லோக்சபா தேர்தலில் களமிறக்க முடிவு செய்துள்ளது. சிலர் மேலிட உத்தரவுக்கு பணிந்து, லோக்சபா தேர்தலில் போட்டியிட அரை மனதாக தயாராகின்றனர்.
மேலும் சிலர் ' நாங்கள் போட்டியிட முடியாது; தேசிய அரசியலில் எங்களுக்கு விருப்பம் இல்லை. வேண்டுமானால் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவருக்கு, சீட் கொடுங்கள். அவர்களை வெற்றி பெற வைப்பது எங்கள் பொறுப்பு' என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
மூத்த அமைச்சர்களே லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்து, தெறித்து ஓடுவதால் காங்கிரஸ் மேலிடம், என்ன செய்வது என தெரியாமல், மண்டையை பிய்த்து கொள்கிறது. இதற்கிடையில், லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில், 21 தொகுதிகள் பா.ஜ., வசமாகும். ஐந்தில் காங்கிரஸ், இரண்டில் ம.ஜ.த., வெற்றி பெறும் என கருத்து கணிப்பு வெளியானதால், காங்கிரசார் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
யார், யார்?
பா.ஜ.,வை எதிர்கொள்ள, திறமையான வேட்பாளர்களை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அமைச்சர்கள், அனுபவம் மிக்க தலைவர்களை களமிறக்கினால், வெற்றி பெறலாம் என, காங்., மேலிடம் எண்ணுகிறது. எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்களிடம் கருத்து சேகரித்து, உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தயாரிக்கிறார்.
பெலகாவி தொகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி அல்லது அவரது மகள்; சிக்கோடியில் லட்சுமண் சவதி அல்லது கணேஷ் ஹுக்கேரி; ஹாவேரியில் எச்.கே.பாட்டீல்; தட்சிண கன்னடாவில் காதர்.
பாகல்கோட்டில், வீணா காசப்பனவர் அல்லது சம்யுக்தா சிவானந்த பாட்டீல்; கலபுரகியில் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதா கிருஷ்ணா; உத்தரகன்னடாவில் தேஷ்பாண்டே; மைசூரில் யதீந்திரா, லட்சுமண் அல்லது சுஷ்ருத் கவுடா.
பல்லாரியில் சவுபர்ணிகா அல்லது துக்காராம்; பெங்களூரு வடக்கில் கிருஷ்ண பைரேகவுடா; பெங்களூரு தெற்கில் பிரியா கிருஷ்ணா காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட கூடும
- நமது நிருபர் -