ஜக்தீப் தன்கர் ராஜினாமாவில் ஏதோ ஒன்று உள்ளது; காங்கிரஸ் சந்தேகம்
ஜக்தீப் தன்கர் ராஜினாமாவில் ஏதோ ஒன்று உள்ளது; காங்கிரஸ் சந்தேகம்
ADDED : ஜூலை 22, 2025 11:32 AM

புதுடில்லி; துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமாவில் ஏதோ ஒரு விஷயம் உள்ளது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
உடல்நலம், மருத்துவ பரிசோதனைகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, தமது துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான கடித்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
பார்லி. கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய முதல் நாளிலேயே ஜக்தீப் தன்கரின் இந்த முடிவு எதிர்க்கட்சிகள் இடையே பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந் நிலையில், ஜக்தீப் தன்கர் ராஜினாமாவில் ஏதோ ஒன்று உள்ளது, அவர் தமது முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
துணை ஜனாதிபதியும், ராஜ்ய சபா தலைவருமான ஜக்தீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்துள்ளது, விவரிக்க முடியாத அதிர்ச்சியை தருகிறது. நேற்று நண்பகல் 12,30 மணிக்கு அலுவல் ஆலோசனைக் குழுவுக்கு தலைமை தாங்கினார். நட்டா, கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறிது நேர விவாதம் முடிந்த பின்னர், மீண்டும் மாலை 4.30 மணிக்கு கூட முடிவு செய்தது.
அதேபோல் மாலை 4.30 மணிக்கு ஜக்தீப் தன்கர் தலைமையில் மீண்டும் குழு கூடியது. ஆனால் நட்டா, கிரண் ரிஜிஜூ வருகைக்காக காத்திருந்த போது, அவர்கள் வரவே இல்லை. இரண்டு மூத்த அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை என்பது ஜக்தீப் தன்கருக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படவில்லை. அவர் கோபம் அடைந்து இந்த குழுக் கூட்டத்தை இன்று மதியம் 1 மணிக்கு மாற்றினார்.
நேற்று மதியம் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. இப்போது ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். அதற்கு அவர் உடல்நல பாதிப்பு பற்றிய காரணங்களை சொல்லி உள்ளார். அதை மதிக்க வேண்டும்.
ஆனால் அவரது ராஜினாமாவுக்கு அதை விட வேறு ஏதேனும் ஆழமான காரணங்கள் உள்ளன. தற்போதுள்ள ஆட்சியின் கீழ் முடிந்தவரை, அவர் எதிர்க்கட்சிகளுக்கு இணங்க முயன்றார். அனைத்து விதிகளையும் கடைபிடிப்பவராக இருந்துள்ளார்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.