லோக்சபா தொகுதி மறுவரையறை காங்., தலைவர் கார்கே எதிர்ப்பு
லோக்சபா தொகுதி மறுவரையறை காங்., தலைவர் கார்கே எதிர்ப்பு
ADDED : மார் 16, 2025 11:41 PM

கதக்: ''மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா தொகுதிகளை மறுவரையறை செய்வது தென் மாநிலங்களுக்கு அநீதியை ஏற்படுத்தும் செயல்,'' என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.
கதக்கில் நடந்த நிகழ்ச்சியில், மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா தொகுதிகளை மறுவரையறை செய்தால், தென் மாநிலங்கள் லோக்சபா தொகுதிகளை இழக்க நேரிடும்.
அதே சமயம் வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 30 சதவீதம் அதிகரிக்கும். இதற்காகவே, இதுபோன்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. மத்திய அரசின் செயல்பாடு, தென் மாநிலங்களுக்கு அநீதியை ஏற்படுத்தும்.
கர்நாடக மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஒன்று சேர்ந்து போராட வேண்டும். கர்நாடகாவின் வளர்ச்சியில் ஏதேனும் பிரச்னை வந்தால், அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
மத்திய அரசு கூட்டாட்சி தத்துவம் பற்றி பேசுகிறது. ஆனால், கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றினால், மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காண்பிக்கப்படுகிறது. மத்திய அரசு, கல்வி துறைக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை.
நவோதயா பள்ளிகளில் 47,000 பணியிடங்களும், கே.வி., பள்ளிகளில் 7,400 பணியிடங்களும், பல்கலைக்கழகங்களில் 5,400 பணியிடங்களும் காலியாக உள்ளன. நாட்டில் 90,000 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.
இதனால், தனியார் பள்ளிகள் 40 சதவீதம் அதிகரித்து உள்ளது. ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.