ADDED : பிப் 09, 2024 07:34 AM

பெங்களூரு: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், ஆலோசித்து முடிவு செய்வதாக கூறியுள்ளார்.
நிதியுதவி வழங்குவதில், மத்திய அரசு பாரபட்சம் பார்ப்பதாக கூறி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் உட்பட, காங்கிரஸ் தலைவர்கள் டில்லியில், நேற்று முன் தினம் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்துவதற்காக, மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உணவு ஏற்பாடு செய்தார்.
உணவருந்தும் போது, அமைச்சர்கள் பலரும் லோக்சபா தேர்தலில் கலபுரகி அல்லது சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிடும்படி, மல்லிகார்ஜுன கார்கேவிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர், பிரசாரத்துக்காக நாடு முழுதும் சுற்ற வேண்டியுள்ளது.
தேர்தலில் நான் போட்டியிடுவது கஷ்டம். ஒருவேளை நான் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவானால், உங்களுடன் ஆலோசித்து முடிவு செய்வேன் என, கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

