ராமர் விழாவை புறக்கணிக்கும் காங்கிரசார் எதிர்க்கட்சி தலைவர் அசோக் பாய்ச்சல்
ராமர் விழாவை புறக்கணிக்கும் காங்கிரசார் எதிர்க்கட்சி தலைவர் அசோக் பாய்ச்சல்
ADDED : ஜன 11, 2024 03:35 AM

பெங்களூரு: “ராமர் கோவில் திறப்பு விழாவை, காங்கிரஸ் புறக்கணித்திருப்பது துர்புத்தியின் அடையாளம். குள்ளநரி அரசியல். இவர்களுக்கு ஸ்ரீராமனே பாடம் புகட்டுவர்,” என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
நாட்டு மக்கள் ஸ்ரீராமர் கோவில் திறப்பு விழாவுக்காக, ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால் காங்கிரசார், ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்லாமல் புறக்கணித்திருப்பது, அவர்கள் துர்புத்தியின் வெளிப்பாடு. முஸ்லிம்களை கவரும் நோக்கில், லோக்சபா தேர்தலில் இவர்களாவது ஆதரவு தரட்டும் என்ற ஆசையில், காங்கிரசார் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
இதுதான் இவர்களின் குணம். இதற்கு முன்பு ராம ஜென்ம பூமி குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, ராமருக்கு பிறப்பு சான்றிதழ் உள்ளதா என, காங்கிரசார் கேள்வி எழுப்பினர்.
ராம ஜென்ம பூமியின் அடையாளங்கள் குறித்து, சந்தேகம் எழுப்பினர். ராமாயணம் கற்பனை கதை. இது நடக்கவே இல்லை என, வாதிட்டனர்.
ஆரம்பத்தில் இருந்தே, ஹிந்துக்கள் என்றால் காங்கிரசாருக்கு அலர்ஜி. சோனியாவும், மல்லிகார்ஜுன கார்கேவும் இந்த முடிவுக்கு வந்ததன் மூலம், ஹிந்துக்களை அலட்சியப்படுத்துகின்றனர்.
ராமர் கோவில் திறப்பு விழாவின்போது, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளன.
துணை முதல்வர் சிவகுமார், அனைத்து இடங்களிலும், ராமர் உள்ளதாக கூறுகிறார். முதல்வர் சித்தராமையா, தன் பெயரிலேயே ராமர் உள்ளது என்கிறார். ஆனால் யாரும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்வதில்லை என்கின்றனர்.
கோவிலுக்காக நான் திரட்டிய 6 - 7 கோடி ரூபாய் நிதியில், 1 கோடி ரூபாய் முஸ்லிம்கள் வழங்கினர். காங்கிரஸ் தலைவர்கள், சதி செய்து, ஹிந்து, முஸ்லிம்களை பிரிக்கின்றனர். இத்தகைய குணம் உள்ளவர்களுக்கு, ராமனே பாடம் புகட்டுவார்.
மாலத்தீவு விஷயமாக, மூத்த தலைவர் சரத் பவார், திரைப்பட நடிகர்கள், பொது மக்கள், பிரதமர் மோடியை ஆதரித்துள்ளனர். ஆனால் சோனியா கோஷ்டி, பிரதமருக்கு அவமதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற நோக்கில் பேசுகின்றனர்.
லோக்சபா தேர்தலில், மாநிலத்தின் அனைத்து தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வேட்பாளர்கள் தேர்வு குறித்து, ஆய்வு நடத்தப்படுகிறது. அனைத்தையும் மேலிடம் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.