எஸ்.சி., - எஸ்.டி., மாநாடு நடத்த காங்., மேலிடம் பச்சைக்கொடி!
எஸ்.சி., - எஸ்.டி., மாநாடு நடத்த காங்., மேலிடம் பச்சைக்கொடி!
ADDED : பிப் 15, 2025 02:45 AM
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநில காங்., தலைவர் சிவகுமார், துணை முதல்வர் பதவி வகிக்கிறார். மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் தன்னிடம் இருப்பதால், சமாதானமாக இருந்தார். ஆனால் அவரது பதவிக்கு, தற்போது ஆபத்து வந்துள்ளது.
இதற்கு முன் கூடுதல் துணை முதல்வர் பதவிகள் உருவாக்கி, சிவகுமாரை, 'டம்மி'யாக்க சித்தராமையா அணியினர் முற்பட்டனர். 'தலித், லிங்காயத், சிறுபான்மையினர் என, சமுதாய வாரியாக துணை முதல்வர் பதவி உருவாக்க வேண்டும்' என, சில அமைச்சர்கள் மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்தனர். இதற்கு மேலிடம் செவி சாய்க்கவில்லை. அதன்பின் அமைச்சர்கள் மவுனமாகினர்.
இதற்கிடையே, 'முடா' வழக்கில், முதல்வர் சித்தராமையா குடும்பத்தினர் சிக்கியதால், முதல்வர் மாற்றம் விவாதம் தலைதுாக்கியது. துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, பரமேஸ்வர் உட்பட சில அமைச்சர்களுக்கு முதல்வராகும் ஆசை துளிர் விட்டது.
இதனால் சித்தராமையா ஆதரவாளர்கள் உஷாராகி, சித்தராமையாவின் பதவியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். 'ஐந்தாண்டுகளும் இவரே முதல்வர்' என, பகிரங்கமாக கூறுகின்றனர். இவரது செல்வாக்கை அதிகரிக்கவும், சிவகுமாரின் செல்வாக்கை குறைக்கவும், முயற்சி நடக்கிறது.
சித்தராமையாவுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், குறிப்பிட்ட மாவட்டங்களில் எஸ்.சி., - எஸ்.டி., மாநாடுகள் நடத்தி, அவர் செயல்படுத்திய திட்டங்கள், மாநிலத்துக்கு அவர் அளித்த பங்களிப்பு குறித்து விவரிக்கவும் திட்டமிட்டனர். ஆனால் இதற்கு சிவகுமார் முட்டுக்கட்டை போட்டார். மேலிடம் மூலமாக மாநாட்டை தடுத்து நிறுத்தினார்.
அமைச்சர்கள் டின்னர் மீட்டிங் என்ற பெயரில், சிவகுமாருக்கு குடைச்சல் கொடுக்க திட்டம் தீட்டினர். முதலில் பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி வீட்டில், டின்னர் மீட்டிங் நடந்தது. அதன்பின் பரமேஸ்வர் வீட்டில் டின்னர் மீட்டிங் நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டது. இதையும் சிவகுமார் ஆட்சேபித்து நிறுத்தினார்.
இதனால், எரிச்சலடைந்த முதல்வரின் ஆதரவு அமைச்சர்கள், சிவகுமாரிடம் உள்ள மாநில தலைவர் பதவியை பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த பதவி மீதும் ராஜண்ணா உட்பட சில அமைச்சர்கள் கண் வைத்துள்ளனர். மாநில தலைவர் பதவி கொடுத்தால், அமைச்சர் பதவியை விட்டுத்தரவும் ராஜண்ணா தயாராக இருக்கிறார். அதற்கான முதற்கட்டமாக ஹாசன் மாவட்ட பொறுப்பில் இருந்து விடுபட முடிவு செய்துள்ளார்.
எஸ்.சி., - எஸ்.டி., மாநாடு நடத்தியே ஆக வேண்டும் என, அமைச்சர்கள் பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா, மஹாதேவப்பா உறுதி பூண்டனர். ஏன் என்றால் முதல்வர், மாநில தலைவர் மாற்றப்பட்டால், தலித் சமுதாய அமைச்சருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என, கூறப்படுகிறது. எனவே மாநாடு நடத்தி, தங்கள் பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளனர்.
டில்லிக்கு சென்று மேலிட தலைவர்களை சந்தித்து, மாநாடு நடத்த வேண்டிய அவசியத்தை விவரித்தனர். 'மாநாடு நடத்தினால் கட்சியின் இமேஜ் அதிகரிக்கும். அந்த சமுதாயத்தினரின் ஆதரவும் கிடைக்கும். இது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது' என, கூறினர்.
இதை ஏற்று கொண்ட மேலிடமும், எஸ்.சி., - எஸ்.டி., மாநாடு நடத்த, பச்சைக்கொடி காட்டியுள்ளது.
டில்லியில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள், மேலிடத்தின் மனதை கரைத்து மாநாட்டுக்கு அனுமதி பெற்றுள்ளனர். இதன் மூலம் சிவகுமாருக்கு, 'செக்' வைத்துள்ளனர். அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே சூட்டோடு, மாநில தலைவரை மாற்றவும், மேலிடம் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், சூசகமாக தெரிவித்தார்.
'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற, காங்கிரஸ் சம்பிரதாயப்படி, சிவகுமாரிடம் உள்ள மாநில தலைவர் பதவியை, வேறு ஒருவருக்கு தர வேண்டும் என, மேலிடத்துக்கு அறிவுறுத்துகின்றனர். எந்த நேரத்திலும் மாநில தலைவர் பறிபோகலாம் என்பதால், சிவகுமார் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.