ADDED : பிப் 26, 2024 07:10 AM

ஹூப்பள்ளி: ''கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது'' என்று, பா.ஜ., ஜெகதீஷ் ஷெட்டர் கணித்து உள்ளார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வதை கேட்டு, கர்நாடகா பா.ஜ., தலைவர்கள் தலையை ஆட்டுகின்றனர் என்று, முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார். முதலில் அவர் காங்கிரஸ் வரலாற்றை பார்க்கட்டும். அந்த கட்சியின் வரலாறு பற்றி சித்தராமையாவுக்கு தெரியாது.
காங்கிரசுக்கு யார் வேண்டும் என்றாலும் வரலாம் என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறுகிறார்.
அந்த கட்சிக்கு செல்ல யார் தயாராக உள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே காங்கிரசில் இருந்தவர்களும், பா.ஜ.,வுக்கு வருகின்றனர்.
அடுத்த 10 ஆண்டுகளிலும், கர்நாடகாவில் காங்கிரஸ் தான் ஆட்சியில் இருக்கும் என்கின்றனர். இனி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியாது.
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் குழப்பம் உள்ளதாக, ஊடகங்களில் மட்டும் பேசப்படுகிறது. மாண்டியா தொகுதி 'சீட்' பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
