காங்கிரஸ் - எம்.எல்.ஏ.,வால் தொந்தரவு; முதல் மனைவி, மகள் குற்றச்சாட்டு
காங்கிரஸ் - எம்.எல்.ஏ.,வால் தொந்தரவு; முதல் மனைவி, மகள் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 10, 2025 01:49 AM

பெங்களூரு,: கர்நாடக காங்., - எம்.எல்.ஏ., யோகேஸ்வர், தங்களுக்கு பல வழிகளிலும் தொல்லை தருவதாக, அவரது முதல் மனைவியும், மகளும், கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவிடம் நேற்று புகார் அளித்தனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு சென்னப்பட்டணா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், யோகேஸ்வர்.
இவருக்கு இரண்டு மனைவியர். தற்போது, இரண்டாவது மனைவி ஷீலாவுடன் வசிக்கிறார். முதல் மனைவி மாளவிகா சோலங்கி மற்றும் மகள் நிஷாவை அலட்சியப்படுத்துவதாக, அவர்கள் பலமுறை புகார் கூறி வந்தனர்.
'என் முன்னேற்றத்துக்கு தந்தை முட்டுக்கட்டை போடுகிறார். பல விதங்களில் தொந்தரவு கொடுக்கிறார். எங்களுக்கு எந்த உதவியும் செய்தது இல்லை' என, நிஷா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நிஷாவும், அவரது தாய் மாளவிகா சோலங்கியும், பெங்களூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர்.
அங்கிருந்த காங்., மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை சந்தித்து, 'யோகேஸ்வரால் எங்களுக்கு பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன. அவருக்கு அறிவுரை கூறி கண்டித்து வையுங்கள்' என, கேட்டுக் கொண்டனர்.
பின், நிஷா அளித்த பேட்டி:
எங்களுக்கு அநியாயம் நடந்துள்ளது என, சுர்ஜேவாலாவிடம் புகார் அளித்தோம். யோகேஸ்வர் மக்கள் பிரதிநிதி. எனவே, சுர்ஜேவாலாவை சந்தித்து, எங்கள் வலியை விவரித்தோம்.
இதை பற்றி முதல்வர், துணை முதல்வர், உள்துறை அமைச்சரிடம் பேசுவதாக நம்பிக்கை அளித்துள்ளார். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.