மாண்டியா பிரச்னைக்கு உளவுத்துறை தோல்வி காரணம் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கானிகா குற்றச்சாட்டு
மாண்டியா பிரச்னைக்கு உளவுத்துறை தோல்வி காரணம் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கானிகா குற்றச்சாட்டு
ADDED : ஜன 30, 2024 08:08 AM

மாண்டியா, : ''மாண்டியா பிரச்னைக்கு உளவுத்துறை தோல்வியே காரணம்'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கானிகா குற்றச்சாட்டி உள்ளார்.
மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கானிகா நேற்று அளித்த பேட்டி:
ஒரு ஊருக்கு தீவைப்பது என்று முடிவு செய்தால், அது தான் நடக்கும். தேசியக் கொடியை ஏற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்தை, இப்போது தான் பார்க்கிறேன்.
கெரகோடு கிராமத்தில் பஸ் நிலையம் கட்டுவதற்காக, நானே நேரில் சென்று ஆய்வு செய்தேன். அப்போது பஸ் நிலையம் கட்ட உள்ள இடத்தில், கொடிக் கம்பம் அமைக்க, என்னிடம் அனுமதி கேட்டனர்.
இங்கு பஸ் நிலையம் கட்டுகிறோம்; வேறு இடத்தில் கொடிக் கம்பம் அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன்.
ஆனாலும் கிராம பஞ்சாயத்திடம் அனுமதி பெற்று, கொடிக் கம்பம் அமைத்தனர். தேசியக் கொடி ஏற்ற அனுமதி வாங்கிவிட்டு, ஹனுமன் உருவம் பொறித்த கொடி ஏற்றி உள்ளனர். கிராமத்திற்கு அதிகாரிகள் சென்று, கொடியை இறக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் யாரும் கேட்கவில்லை.
இதனால் சட்டத்திற்கு உட்பட்டு கொடி இறக்கப்பட்டது. ஆனால் கிரிமினல் நோக்கம் கொண்ட சிலர், அரசியலுக்கு பயன்படுத்தி, பிரச்னையை பெரிதாக்கிவிட்டனர்.
ராமர் கோவில்
ஹனுமன் கொடி இறக்கிய சர்ச்சைக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் எனது பேனரை கிழித்து, தீ வைத்து உள்ளனர். இந்த பிரச்னைக்கு பின்னணியில் பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள், வக்கீல் ஒருவரின் பங்கு உள்ளது.
மாண்டியாவில் அமைதியை நிலைநாட்ட, வீடு வீடாக சென்று தேசியக் கொடி வழங்குவேன். முடிந்தால் என்னை தடுத்து பார்க்கட்டும்; நான் ஒரு ஹிந்து.
மாண்டியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளேன். அயோத்தி ராமர் கோவில் திறப்பு அன்று, மாண்டியாவில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்றேன்.
*முதல்வருக்கு கடிதம்
ஹனுமன் உருவம் பொறித்த கொடியை இறக்கினால், இவ்வளவு பெரிய பிரச்னை வரும் என்பதை அறிய, உளவுத்துறை தவறிவிட்டது.
இந்த பிரச்னைக்கு உளவுத்துறை தோல்வியே காரணம். இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதுவேன்.
கெரகோடுவில் போராட்டம் நடத்திய ஹிந்து அமைப்பினர், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்களே இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்து, ஆட்களை அழைத்து வந்து உள்ளனர். கெரகோடு மக்கள் அப்பாவிகள்.
அவர்களை வைத்து அரசியல் செய்கின்றனர். பிரச்னையை ஏற்படுத்தியவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் தேசபக்தர்கள் இல்லை. துரோகிகள். இந்த பிரச்னையை நான் எளிதில் விட மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.