அமைச்சர் மல்லிகார்ஜுனை மாற்றுங்கள் முதல்வருக்கு காங்., -- எம்.எல்.ஏ., கடிதம்
அமைச்சர் மல்லிகார்ஜுனை மாற்றுங்கள் முதல்வருக்கு காங்., -- எம்.எல்.ஏ., கடிதம்
ADDED : டிச 20, 2024 05:41 AM

தாவணகெரே: தாவணகெரே மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியில் இருந்து, அமைச்சர் மல்லிகார்ஜுனை மாற்றும்படி முதல்வர் சித்தராமையாவுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா கடிதம் எழுதி உள்ளார்.
தாவணகெரே வடக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மல்லிகார்ஜுன். கர்நாடக தோட்டக்கலை அமைச்சராக உள்ளார். இவருக்கு எதிராக சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு நேற்று முன்தினம் எழுதிய கடிதம்:
தாவணகெரே மாவட்ட பொறுப்பு அமைச்சர் மல்லிகார்ஜுன், பா.ஜ.,வுடன் தொடர்ந்து சமராச அரசியல் செய்து வருகிறார். இது, கட்சியின் விசுவாசமான தொண்டர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசு, ஒரு அதிகாரியை மாற்றினால், அந்த அதிகாரி அமைச்சர் ஆதரவுடன் தொடர்ந்து அங்கேயே பணி செய்கிறார்.
மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குனராக நமது கட்சியை சேர்ந்தவர் வர வாய்ப்பு இருந்தது. ஆனால் மல்லிகார்ஜுன் பா.ஜ., வுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்தார்.
லோக்சபா தேர்தலில் மல்லிகார்ஜுன் எம்.எல்.ஏ.,வாக உள்ள தாவணகெரே வடக்கு தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் கூடுதல் ஓட்டுகளை பெற்றார்.
வரவிருக்கும் தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தல்களில் சமரச அரசியல் செய்தால் அது கட்சிக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், தாவணகெரே மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியில் இருந்து மல்லிகார்ஜுனை மாற்றிவிட்டு புதிதாக ஒருவரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
பசவராஜ் சிவகங்கா, ஒரு காலத்தில் மல்லிகார்ஜுனின் தீவிர ஆதரவாளராக இருந்தார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் வாங்கி தரும்படி கேட்டார்.
ஆனால் சீட் வாங்கி தர மல்லிகார்ஜுன் மறுத்துவிட்டார். ஆனாலும், விவசாய சங்க தலைவர்கள் சிலரின் உதவியுடன் பசவராஜ் சிவகங்கா சீட் வாங்கி வெற்றி பெற்றும் காட்டினார்.
அதன்பின், மல்லிகார்ஜுனை நேரடியாக விமர்சித்து வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த லோக்சபா தேர்தலில், மல்லிகார்ஜுன் உடனான மோதலை மறந்துவிட்டு, அவரது மனைவி பிரபா வெற்றிக்காக பசவராஜ் சிவகங்கா தீவிர பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.