காங்., - எம்.எல்.ஏ., பயன்படுத்திய மோசடி பெண்ணின் கார் பறிமுதல்
காங்., - எம்.எல்.ஏ., பயன்படுத்திய மோசடி பெண்ணின் கார் பறிமுதல்
ADDED : ஜன 11, 2025 11:02 PM
பெங்களூரு:மாண்டியா மலவள்ளியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா கவுடா. பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசிக்கிறார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் தங்கை என்று கூறி, நகைக்கடையில் 8 கோடி ரூபாய்க்கு நகை வாங்கி மோசடி செய்தார். இந்த வழக்கில் ஐஸ்வர்யா, அவரது கணவர் ஹரிஷ் கைது செய்யப்பட்டனர். தற்போது ஜாமினில் உள்ளனர்.
இந்நிலையில் ஆர்.ஆர்.நகரை சேர்ந்த டாக்டர் மஞ்சுளா, மாண்டியாவின் ரவிகுமார் ஆகியோர் அளித்த புகார்களின்பேரில், ஐஸ்வர்யா மீது மேலும் இரு வழக்குகள் பதிவாகின.
மாண்டியாவில் பதிவான வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி ஐஸ்வர்யாவுக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்ததில் இருந்து, தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி பெயரும் அடிபடுகிறது. அவருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையில் 50 கோடி ரூபாய்க்கு பண விவகாரம் நடந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஐஸ்வர்யா பெயரில் இருக்கும் சொகுசு காரையும், வினய் குல்கர்னி பயன்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. பெங்களூரில் உள்ள வினய் குல்கர்னியின் வீட்டில் இருந்து, அந்த காரை ஆர்.ஆர்.நகர் போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.