ஜார்க்கண்டில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி: முதல்வர் சம்பாய் சோரன் மறுப்பு
ஜார்க்கண்டில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி: முதல்வர் சம்பாய் சோரன் மறுப்பு
ADDED : பிப் 18, 2024 03:53 PM

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில காங்கிரசில் எம்.எல்.ஏ.,க்களிடையேயான கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது என வெளியான தகவலை அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் மறுத்துள்ளார். மேலும், அவர் கூட்டணி அரசில் விரிசல் இல்லை என நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்டில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் கடந்த 31ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் கடந்த 2ம் தேதி முதல்வராக பதவியேற்றார். அவருடன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆலம்கிர் ஆலம், ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர் சத்யானந்த் போக்தா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மொத்தம் 81 உறுப்பினர்கள் உள்ள சட்டசபையில், 47 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் சம்பாய் சோரன் பெரும்பான்மையை நிரூபித்தார். ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் பதவி அளிக்கப்பட்டதை எதிர்த்து, 12 காங்., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். சட்டசபை கூட்டத்தொடரை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர் என தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்குர், கூட்டணி வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சம்பாய் சோரன் பேட்டி
இது குறித்து முதல்வர் சம்பாய் சோரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இது காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம். அதனை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இதைப் பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை. காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இடையே எவ்வித கருத்து மோதலும் சர்ச்சையும் இல்லை. கூட்டணி அரசில் விரிசல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.