13ல் பெங்களூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்!: உட்கட்சி பிரச்னை குறித்து முதல்வர் ஆலோசனை
13ல் பெங்களூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்!: உட்கட்சி பிரச்னை குறித்து முதல்வர் ஆலோசனை
ADDED : ஜன 10, 2025 07:27 AM
பெங்களூரு: வரும் 13ம் தேதி பெங்களூரு தனியார் ஹோட்டலில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது. இதில், உட்கட்சி பிரச்னைகளை சரி செய்வது குறித்து, முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடக்கிறது. முதல்வர் பதவி விவகாரத்தில் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும் இடையில் பனிப்போர் நிலவுகிறது. ஆனால், வெளியே காட்டி கொள்ளாமல் இருவரும் சமாளித்து வருகின்றனர்.
இந்நிலையில், புத்தாண்டை கொண்டாட சிவகுமார் வெளிநாடு சென்றிருந்த நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி வீட்டில் நடந்த இரவு விருந்தில், சித்தராமையா, அமைச்சர்கள் பரமேஸ்வர், மஹாதேவப்பா, ராஜண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். இது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலிட உத்தரவு
இந்நிலையில், தலித் சமூகத்தை சேர்ந்த அமைச்சர் பரமேஸ்வர் எஸ்.சி., -- எஸ்.டி., சமூக அமைச்சர்களுக்கு தனது வீட்டில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
'முடா' வழக்கில் சிக்கியுள்ள சித்தராமையா பதவி விலகினால், அடுத்து முதல்வர் பதவியை தலித் சமூகத்திற்கு கொடுக்க வேண்டும் என்றும் காங்கிரசில் குரல்கள் எழுகின்றன.
இதனால், பரமேஸ்வர் ஏற்பாடு செய்திருந்த விருந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த விருந்தை நடக்க விடாமல், மேலிட தலைவர்கள் மூலம் தடுத்து வெற்றி கண்டார் சிவகுமார். இதனால், அவர் மீது பரமேஸ்வர் கடும் கோபத்தில் உள்ளார்.
'நேரம் வரும்போது நாங்கள் யார் என்று காட்டுவோம்' என்று பரமேஸ்வர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படி, முதல்வர் பதவிக்காக காங்கிரசுக்குள் கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இதை சாதகமாக்கி கொண்ட பா.ஜ., காங்கிரஸ் அரசை விமர்சித்து வருகிறது. இது, காங்கிரஸ் மேலிடத்திற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சித்தராமையா, சிவகுமாரிடம் பேசிய கட்சி மேலிடம், கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்னைகளை சரி செய்ய எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நடத்துங்கள் என்று உத்தரவிட்டது.
கோஷ்டிப்பூசல்
இதையடுத்து, வரும் 13ம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடக்க உள்ளது. இதில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் குறித்து சிவகுமார் கூறுகையில், ''பெலகாவியில் கடந்த மாதம் டிசம்பர் 26, 27ம் தேதிகளில் காங்கிரஸ் மாநாடு நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
''முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால், 27ம் தேதி நடக்க இருந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
''அந்த மாநாட்டை வரும் 21ம் தேதி நடத்த உள்ளோம். இது குறித்து விவாதிக்க, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கட்சியை வலுப்படுத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிப்போம்,'' என்றார்.
ஆனாலும், இந்த கூட்டத்தின் போது முதல்வர், துணை முதல்வரின் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இடையில் முதல்வர் பதவி தொடர்பாக விவாதம் நடக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும், வளர்ச்சி பணிகளுக்கு நிதி வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.,க்கள் தங்களது குரலை உயர்த்தி பேசவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
கர்நாடக பா.ஜ.,விலும் ஏற்கனவே கோஷ்டிப்பூசல் உள்ளது. இப்போது, காங்கிரசிலும் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.