அதானி நிறுவனம் மீது விசாரணை காங்., - எம்.எல்.சி., வலியுறுத்தல்
அதானி நிறுவனம் மீது விசாரணை காங்., - எம்.எல்.சி., வலியுறுத்தல்
ADDED : டிச 07, 2024 11:13 PM

பெங்களூரு: ''பெலகேரி துறைமுகத்தில் இருந்து தாது மணல் கடத்திய வழக்கில், அதானி நிறுவனம் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்,'' என, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, கார்வார் பெலகேரி துறைமுகத்தில் வைக்கப்பட்டு இருந்த, தாது மணலை கடத்திய வழக்கில், எங்கள் கட்சி எம்.எல்.ஏ., சதீஷ் சைலுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தாது மணலை மல்லிகார்ஜுன் ஷிப்பிங், அதானி என்டர்பிரைசஸ், சல்கோன்கர் மைனிங் இன்டஸ்டரி, ராஜ் மஹால் ஆகிய நான்கு நிறுவனங்கள் அதிகளவில் கடத்தியது, லோக் ஆயுக்தா விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தாது மணல் கடத்தல் குறித்து விசாரிக்கும் சி.பி.ஐ., அதானி நிறுவனத்தை தவிர மற்ற மூன்று நிறுவனங்கள் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட அதானி நிறுவனம் மீது எந்த விசாரணையும் நடக்கவில்லை.
அந்த நிறுவனம் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு லஞ்சம் கொடுத்து, தாதுமணல் கடத்தியது என்ற குற்றச்சாட்டு குறித்து எந்த விசாரணையும் இல்லை.
அதானி நிறுவனத்திற்கு சொந்தமான கணினியை, லோக் ஆயுக்தா கைப்பற்றியபோது யார், யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற தகவலை கண்டுபிடித்தது.
இதுபற்றி லோக் ஆயுக்தா அறிக்கையின் 51வது பக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அதானி நிறுவனம் மீதும் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
அதானி நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருப்பமான நிறுவனம். நாட்டில் என்ன செய்தாலும் அந்த நிறுவனத்தின் மீது, நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை.
அமெரிக்காவில் அதானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளபோது, மாநிலத்தில் நமது சொத்துகளை கொள்ளையடித்த வழக்கு பற்றியும் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.