காங்கிரசார் ஆட வேண்டாம் எம்.எல்.சி., விஸ்வநாத் காட்டம்
காங்கிரசார் ஆட வேண்டாம் எம்.எல்.சி., விஸ்வநாத் காட்டம்
ADDED : நவ 25, 2024 06:51 AM

மைசூரு: ''இடைத்தேர்தல் வெற்றி, முதல்வர் சித்தராமையாவின் தலைமைக்கு கிடைத்த வெற்றி அல்ல. இதை வைத்து காங்கிரசார் ஆட்டம் போட வேண்டிய அவசியம் இல்லை,'' என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இடைத்தேர்தல் வெற்றி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, மக்கள் அளித்த தீர்ப்பு அல்ல. இந்த தீர்ப்பினால் இவரது ஊழல் மறைந்து போகாது.
வெற்றி பெற்றவர்கள் மார்தட்ட வேண்டிய அவசியம் இல்லை. பணம், மதுபானம் கொடுத்து, தேர்தலில் வெற்றி பெறுகின்றனர். இப்போதும் அப்படித்தான் நடந்துள்ளது. இடைத்தேர்தல் வெற்றி, முதல்வர் சித்தராமையாவின் தலைமைக்கு கிடைத்த வெற்றி அல்ல. இதை வைத்து காங்கிரசார் ஆட்டம் போட வேண்டிய அவசியம் இல்லை.
'முடா' முறைகேடு மைசூரு சம்பந்தப்பட்டது. இடைத்தேர்தல் வெற்றி சென்னப்பட்டணாவில் வேலை செய்யும் என, நினைக்க வேண்டாம். இடைத்தேர்தல் எப்படி நடந்தது என, அனைவருக்கும் தெரியும். ஊழல் களங்கம் சுமந்தவர்கள், ஆட்டம் போட தேவையில்லை.
சென்னப்பட்டணாவில் நிகில் தோற்றுள்ளார். ஜனநாயக நடைமுறையில் இது சகஜம். பா.ஜ., - ம.ஜ.த.,வினர் ஒற்றுமையாக பணியாற்றினர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.
பா.ஜ.,வில் நான்கு கோஷ்டி இருப்பது உண்மைதான். வாய்ப்பு பெற்றவர்களுக்கே, மீண்டும், மீண்டும் வாய்ப்பு அளிக்கின்றனர். இந்த தவறுகளை சரி செய்து கொண்டு, மீண்டும் துளிர்த்தெழ நேரம் வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.