குஜராத்தில் ஓட்டுத்திருட்டு; ராகுல் மீண்டும் புலம்பல்
குஜராத்தில் ஓட்டுத்திருட்டு; ராகுல் மீண்டும் புலம்பல்
ADDED : ஜன 24, 2026 09:02 PM

புதுடில்லி: குஜராத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் மூலம் ஓட்டுத் திருட்டு நடப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள ஒரு நபரின் பெயரில் ஏராளமான ஆட்சேபணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டும் தேர்தல் ஆணையம் இதுவரையில் பதிலளிக்க வில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எங்கு எல்லாம் நடக்கிறதோ, அங்கு எல்லாம் ஓட்டுத் திருட்டு நடப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்; குஜராத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படுவது எந்தவிதமான நிர்வாக நடைமுறையும் அல்ல. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட, ஒரு ஓட்டுத் திருட்டு. இதில், மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான ஆட்சேபனைகள் ஒரே பெயரின் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட சமூகங்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவு வாக்குச்சாவடிகளில் இருந்து ஓட்டுகள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. எங்கெல்லாம் பாஜ தோல்வியை எதிர்கொள்கிறதோ, அங்கெல்லாம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து அப்புறப்படுத்துகின்றனர். இதே போன்று தான் கர்நாடகாவின் ஆலந்திலும், மஹாராஷ்டிராவின் ராஜூராவிலும் நடந்தது. தற்போது, அதே பாணியைத் தான் குஜராத், ராஜஸ்தான் மற்றும் எஸ்ஐஆர் திணிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் கையாண்டு வருகின்றனர்.
ஒரு நபர், ஒரு ஓட்டு என்ற அரசியலமைப்பு உரிமையை ஒழிப்பதற்கான ஒரு ஆயுதமாக எஸ்ஐஆர் மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்காமல், பாஜ தீர்மானிக்கிறது. இதில் உண்மை என்னவென்றால், தேர்தல் ஆணையம் இனி ஜனநாயகத்தின் பாதுகாவலனாக இல்லை. மாறாக இந்த ஓட்டுத் திருட்டு சதியின் முக்கியக் கூட்டாளியாக மாறிவிட்டது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

