காங்கிரஸ் எம்.பி.,யின் பிரிவினை பேச்சு: பார்லி.,யில் அமைச்சர்கள் கொந்தளிப்பு
காங்கிரஸ் எம்.பி.,யின் பிரிவினை பேச்சு: பார்லி.,யில் அமைச்சர்கள் கொந்தளிப்பு
UPDATED : பிப் 03, 2024 03:05 PM
ADDED : பிப் 02, 2024 11:47 PM

கர்நாடக துணை முதல்வரின் சகோதரரும், லோக்சபா எம்.பி.,யுமான டி.கே.சுரேஷ், 'மத்திய பட்ஜெட்டில் தென் மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை.
'இந்த நிலை நீடித்தால் தென் மாநிலங்களுக்கு என, தனி நாடு கேட்க வேண்டியிருக்கும்' என பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மன்னிப்பு
இந்நிலையில், நேற்று ராஜ்யசபாவில் அலுவல்கள் துவங்கியதும், டி.கே.சுரேஷின் பேச்சை கடுமையாக கண்டித்து, சபை முன்னவரும், அமைச்சருமான பியுஷ் கோயல், ''தன் பேச்சுக்கு டி.கே.சுரேஷ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். காங்., தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, காங்., தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
பேசியவர் லோக்சபா எம்.பி., என்பதால், இங்கு அதைப் பற்றி பேசுவது சரியல்ல.
மேலும், நாட்டை துண்டாடுவோம் என்று யார் பேசினாலும், அதை காங்., ஏற்றுக் கொள்ளாது. பேசியவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும், அதுபோன்ற பேச்சை எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, நாம் எல்லாரும் ஒரே மக்கள். எப்போதுமே ஒன்றாகவே இருப்போம்.
உயிர் தியாகம்
அவ்வாறு ஒற்றுமையாக இருப்பதற்காகவே இந்திரா, ராஜிவ் போன்றவர்கள் உயிர் தியாகம் செய்தனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன்பின் சபை தலைவர் ஜகதீப் தன்கர் பேசுகையில், ''இது மிக மிக தீவிரமான விஷயம். லோக்சபாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், இங்கு கண்டிக்க கூடாது என கூற முடியாது.
''இதுகுறித்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
சோனியாவின் பதில் என்ன?
எம்.பி.,யாக பதவி வகிப்பவர் நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக பேசுகிறார். அதை, அந்த கட்சி தலைமை வேடிக்கை பார்க்கிறது. தனிநாடு கேட்ட அந்த எம்.பி., தன் பதவியேற்பு உறுதிமொழியை மீறி விட்டார். இதற்கு காங்., தலைமை என்ன பதில் சொல்லப்போகிறது. சோனியாவிடம் இருந்து மன்னிப்பை மட்டுமல்ல; எம்.பி.,யின் மீது நடவடிக்கை எடுப்பாரா என்பதையும் எதிர்பார்க்கிறோம். கண்டனத்திற்குரிய இந்த விவகாரம் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பிரகலாத் ஜோஷி,
மத்திய அமைச்சர், பா.ஜ.
- நமது டில்லி நிருபர் -
,

