பிரதமர் மோடியை தாக்க காங்., - எம்.பி.,க்கள் 'சதி': லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா 'திடுக்' தகவல்
பிரதமர் மோடியை தாக்க காங்., - எம்.பி.,க்கள் 'சதி': லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா 'திடுக்' தகவல்
UPDATED : பிப் 06, 2026 11:03 AM
ADDED : பிப் 06, 2026 01:23 AM

- நமது டில்லி நிருபர் -
''லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கை அருகே சென்று காங்., - எம்.பி.,க்கள் எதிர்பாராத செயல்களில் ஈடுபடக்கூடும் என்ற உறுதியான தகவல் கிடைத்தது. அதனாலேயே சபைக்கு வர வேண்டாம் என, அவரை கேட்டுக் கொண்டேன். அப்படி நடந்திருந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளை சிதைத்திருக்கும்,'' என, சபாநாயகர் ஓம் பிர்லா திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ல் துவங்கியது. கடந்த 1ல், 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், மத்திய அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி எம்.பி.,க்கள் பேசினர்.
ஆர்ப்பாட்டம்
காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதியதாகக் கூறப்படும் இதுவரை வெளியிடப்படாத, அவரது சுயசரிதையான, 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி' என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடியை விமர்சித்தார். இதற்கு, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
'வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டி பேசக்கூடாது' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் கண்டிப்பு காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட காங்., - எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், ஹிபி ஈடன் உள்ளிட்ட எட்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
லோக்சபா நேற்று முன்தினம் காலை கூடியது முதலே, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியின் இருக்கையை முற்றுகை யிட்டு, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.,க் களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி உரை மீது, மாலை 5:00 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை தருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் இடைவிடாத அமளியால், நாள் முழுதும் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனால், பதிலுரை அளிக்க பிரதமர் மோடி, லோக்சபாவுக்கு வரவில்லை. இந்நிலையில், வழக்கம் போல லோக்சபா நேற்று காலை கூடியது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணி அளவில் மீண்டும் கூடியது. அப்போதும் அமளி தொடரவே, இன்று காலை 11:00 மணி வரை சபையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார்.
கவலைக்குரியது
இதன்பின், சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: லோக்சபாவில், ஜனாதிபதி உரைக்கு பதிலுரை அளிக்க பிரதமர் மோடி தயாராகவே இருந்தார். ஆனால், சபையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் முறையற்றது.
குறிப்பாக, பிரதமர் மோடியின் இருக்கையை, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.,க்கள் முற்றுகையிட்டது கவலைக்குரியது. nபார்லி., வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் இதற்கு முன் நடந்ததே இல்லை. சபைக்கு பிரதமர் மோடி வந்தால், காங்., - எம்.பி.,க்கள் அவரை சூழ்ந்து, எதிர்பாராத செயல்களில் ஈடுபடக்கூடும் என்ற உறுதியான தகவல் எனக்கு கிடைத்தது.
அப்படி நடந்திருந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளை சிதைத்திருக்கும். சபையின் கண்ணியத்தை காக்க வேண்டியது என் பொறுப்பு என்பதால், சபைக்கு வர வேண்டாம் என, பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டேன். அதனாலேயே அவர் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

