'நாங்கள் 5 ஆண்டில் செய்ததை செய்ய காங்கிரசுக்கு நீண்ட காலம் தேவை' அருணாச்சலில் பிரதமர் மோடி பேச்சு
'நாங்கள் 5 ஆண்டில் செய்ததை செய்ய காங்கிரசுக்கு நீண்ட காலம் தேவை' அருணாச்சலில் பிரதமர் மோடி பேச்சு
ADDED : மார் 09, 2024 11:36 PM

இடாநகர்: ''வட கிழக்கு மாநிலங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில், என் தலைமையிலான பா.ஜ., அரசு ஏராளமான வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளது.
''இதுவே காங்கிரசாக இருந்திருந்தால், இவற்றையெல்லாம் செய்ய, 20 ஆண்டுகள் எடுத்திருக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்து வருகிறார்.
நாட்டின் பாதுகாப்பு
அந்த வகையில், வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடாநகரில் நடந்த நிகழ்ச்சியில், வட கிழக்கு பிராந்தியங்களுக்கான, 55,600 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை, பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:
நம் நாட்டின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியா உடனான பிற உறவுகளில், வட கிழக்கு பிராந்தியம் வலுவான இணைப்பாக மாறப் போகிறது. இந்த பிராந்தியத்தில் தற்போது, 55,000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் துவங்கப்பட்டு உள்ளன.
வட கிழக்கு பிராந்தியத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், என் தலைமையிலான பா.ஜ., அரசு ஏராளமான வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளது. இதுவே காங்கிரசாக இருந்திருந்தால், இவற்றையெல்லாம் செய்ய, 20 ஆண்டுகள் எடுத்திருக்கும்.
அருணாச்சலில் இரு லோக்சபா தொகுதிகள் மட்டுமே இருப்பதால், அங்குள்ள எல்லை யோர கிராமங்களை புறக்கணித்து, நாட்டின் பாதுகாப்போடு, காங்., விளையாடியது.
முன்னுரிமை
ஆனால் நாங்கள், நாட்டை வலிமையாக்க மாநிலத்தின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றி வருகிறோம். கடந்த 2019ல், சேலா சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டினேன்.
அப்போது, தேர்தல் ஆதாயத்துக்காக இதை நான் செய்தேன் என சிலர் விமர்சித்தனர். தற்போது அது தவறு என, நிரூபிக்கப்பட்டு உள்ளது.
என்னுடைய வாக்குறுதிகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்படுகின்றன என்பதை, ஒட்டு மொத்த வட கிழக்கு மாநிலங்களின் மக்கள் கவனித்து வருகின்றனர்.
அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை நான் ஒருபோதும் கெடுக்க மாட்டேன்.
வளர்ந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்ற, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் சுத்தமான குடிநீர், வீடுகள், எரிவாயு இணைப்புகள், மின்சாரம் மற்றும் இணைய வசதிகளைப் பெறுவதை உறுதி செய்வதே என் முன்னுரிமை.
என் மூன்றாவது ஆட்சிக் காலத்தில், சுற்றுலாத் துறை, வேலையில்லாத இளைஞர்களுக்கான ஸ்டார்ட் அப் துவங்குதல் போன்றவற்றில் அதி கவனம் செலுத்தப்படும்.
மேலும், நாட்டில் உள்ள மூன்று கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதே என் குறிக்கோள்.
இவ்வாறு அவர் பேசினார்.

