ADDED : ஜன 01, 2024 06:29 AM

பெங்களூரு: ''நான் பா.ஜ.,வை துறந்து, காங்கிரசுக்கு செல்வதாக சிலர் வதந்தி பரப்புகின்றனர். எந்த காரணத்தை கொண்டும், காங்கிரசுக்கு செல்வது குறித்து ஆலோசிக்கவில்லை,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலில் தோற்ற பின், விரக்தியடைந்த முன்னாள் அமைச்சர் சோமண்ணா, கட்சி நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார். பா.ஜ., மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்தார். இவரை சமாதானம் செய்ய மாநில தலைவர் அல்லது எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படலாம் என, ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எந்த பதவியும் கிடைக்கவில்லை.
தன்னை ஓரங்கட்டுவதால், கொதிப்படைந்த சோமண்ணா, பா.ஜ.,வுக்கு முழுக்கு போட்டு, காங்கிரசுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். லோக்சபா தேர்தலில், துமகூரு தொகுதியில் காங்., வேட்பாளராக போட்டியிடுவார் என, தகவல் வெளியானது. ஆனால், இதை சோமண்ணா மறுத்துள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில், நான் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவேன் என, சிலர் வதந்தி பரப்பியுள்ளனர். நான் காங்கிரஸ் வேட்பாளர் அல்ல.
பா.ஜ., மேலிட தலைவர்கள், ஏற்கனவே இரண்டு முறை என்னை டில்லிக்கு அழைத்தனர். மேலிடத்தின் பேச்சுக்கு கட்டுப்பட, நான் தயாராக உள்ளேன். எங்களுக்கு தொந்தரவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளேன். ஜனவரி 10 க்குள் அனைத்து பிரச்னைகளும் சரியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
சில தலைவர்களின் முன்னிலையில், பேச்சு நடத்த வேண்டும் என, நான் கேட்டுள்ளேன். எனக்கு ஏற்பட்ட பிரச்னைகளை மேலிடத்திடம் விவரித்துள்ளேன். ஜனவரி 6 அல்லது 7ல், டில்லிக்கு வரும்படி எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர்; நான் செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.