காங்., கூட்டணி மீது பாக்., நம்பிக்கை: மத்திய அமைச்சர் அமித் ஷா விளாசல்
காங்., கூட்டணி மீது பாக்., நம்பிக்கை: மத்திய அமைச்சர் அமித் ஷா விளாசல்
ADDED : செப் 20, 2024 12:32 AM

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கருத்து தெரிவித்த நிலையில், “காங்கிரசும், பாகிஸ்தானும் ஒரே நோக்கத்தில் உள்ளன. மோடி ஆட்சியில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் வராது,” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறினார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
அவரது அரசில் ராணுவ அமைச்சராக இருப்பவர் கவாஜா ஆசிப். இவர், பாகிஸ்தான் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் காஷ்மீர் தேர்தல் மற்றும் சிறப்பு அந்தஸ்து குறித்து பேசினார்.
அம்பலம்
அதில், “காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சிக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவது, அந்த கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
“இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அரசும், காங்கிரஸ் -- தேசிய மாநாட்டு கூட்டணியும் ஒரே பக்கத்தில் நிற்கின்றன,” என்று கூறினார்.
அவரது கருத்து, காங்கிரஸ் கூட்டணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் ஆதரவு தெரிவிப்பதை பா.ஜ.,வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில், காங்கிரஸ் கூட்டணிக்கு பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் ஆதரவு தெரிவித்திருப்பது மீண்டும் காங்கிரசை அம்பலப்படுத்தியுள்ளது.
காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் ஒரே நோக்கம், ஒரே திட்டம் இருப்பதை அந்நாட்டு ராணுவ அமைச்சரின் கருத்து மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது. ராகுல், கடந்த சில ஆண்டுகளாக தேசவிரோத சக்திகளுடன் கைகோர்த்து கொண்டு, நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி வருகிறார்.
மீண்டும் வராது
சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து ஆதாரம் கேட்டார். இந்திய ராணுவத்துக்கு எதிரான விஷயங்களை பேசினார். இப்படி, ராகுலின் காங்கிரசும், பாகிஸ்தானும் எப்போதும் ஒரே மாதிரி செயல்படுகின்றன.
ஆனால், மத்தியில் மோடி அரசு இருப்பதை காங்கிரசும், பாகிஸ்தானும் மறந்துவிட்டன. எங்கள் ஆட்சியில் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தோ அல்லது பயங்கரவாதமோ மீண்டும் வரவே வராது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.