ம.ஜ.த.,வை கூண்டோடு காலி செய்ய காங்கிரஸ் திட்டம்! பழைய மைசூரின் 5 எம்.எல்.ஏ.,க்களுக்கு வலை
ம.ஜ.த.,வை கூண்டோடு காலி செய்ய காங்கிரஸ் திட்டம்! பழைய மைசூரின் 5 எம்.எல்.ஏ.,க்களுக்கு வலை
ADDED : பிப் 03, 2025 05:00 AM

கர்நாடகாவில் மாநில கட்சியாக ம.ஜ.த., உள்ளது. ஆனால், அவர்களால் தனித்து ஆட்சிக்கு வர முடியவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ், பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கின்றனர். இந்நிலையில், கடந்த 2023 சட்டசபை தேர்தலில், ம.ஜ.த., 19 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பின், பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்தது.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், மாண்டியாவில் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு குமாரசாமி வெற்றி பெற்றதால், சென்னப்பட்டணா எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.
அந்த தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், காங்கிரசின் யோகேஸ்வர் வெற்றி பெற்றதால், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.
மேலிடம் சாடல்
லோக்சபா தேர்தலில், 15 முதல் 18 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று, காங்கிரஸ் தலைவர் கூறி வந்தனர். ஆனால், வெறும் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு, அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லையா என்று, சித்தராமையா, சிவகுமார், அமைச்சர்களை மேலிடம் கடுமையாக சாடியது.
பெங்களூரு ரூரல், சிக்கபல்லாபூர், கோலார், துமகூரு ஆகிய தொகுதிகளில் எப்படியாவது வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் இருந்தது. ஆனால் அந்த நான்கு தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற்றது. பா.ஜ., - எம்.பி.,க்கள் வெற்றிக்கு ம.ஜ.த., ஓட்டுகளும் காரணமாக அமைந்தது.
இந்த கூட்டணி இப்படியே நீடித்தால், வரும் 2028 தேர்தலில் ஆட்சிக்கு வர முடியாது என்று நினைத்த காங்கிரஸ் தலைவர்கள், ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ஆபாச வீடியோ வழக்கை முன்னெடுத்து கூட்டணியை தாக்கி பேசினர். ஆனாலும், கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படவில்லை.
சித்து பேச்சு
இனி கூட்டணியை உடைக்க முடியாது என்று நினைத்த காங்கிரஸ் தலைவர்கள், பழைய மைசூரு பகுதியின் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களுக்கு குறி வைக்க ஆரம்பித்துள்ளனர். முதல்வர் சித்தராமையா மைசூரை சேர்ந்தவர். ம.ஜ.த., கட்சியில் இருந்தவர். இதனால் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களுடன் அவருக்கு நல்லுறவு உள்ளது.
அதேபோல துணை முதல்வர் சிவகுமாரும், பழைய மைசூரு பகுதியின் ஒக்கலிக சமூக தலைவராக உருவெடுத்து வருகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து, பழைய மைசூரு பகுதியின் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களுடன் பேச ஆரம்பித்து உள்ளனர். 'எங்கள் கட்சிக்கு வாருங்கள். உங்களை மரியாதையாக நடத்துகிறோம். இடைத்தேர்தலில் உங்களை வெற்றி பெற வைக்கிறோம். வாய்ப்பு இருந்தால் அமைச்சர் பதவியும் கொடுக்கிறோம்' என்று பேசி வருவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே குமாரசாமி மீது அதிருப்தியில் இருக்கும், ம.ஜ.த., மூத்த எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா, கட்சியை விட்டு விலகும் முடிவில் உள்ளார்.
அவர் எந்த நேரத்திலும் காங்கிரஸ் பக்கம் தாவலாம் என்று சொல்லப்படுகிறது.
மேலும் சாம்ராஜ்நகரின் ஹனுார் எம்.எல்.ஏ., மஞ்சுநாத், சிக்கபல்லாபூரின் சிட்லகட்டா எம்.எல்.ஏ., ரவிகுமார், வடமாவட்டத்தின் குர்மித்கல் எம்.எல்.ஏ., சரண்கவுடா கந்தகூர் ஆகியோரும், கட்சியுடன் தொடர்பில் இல்லை என்றும் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
சரண்கவுடா கந்தகூர், குமாரசாமி மகன் நிகிலின் நண்பர் ஆவார். இதனால், அவர் கட்சியை விட்டு விலகுவாரா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் ஜி.டி.தேவகவுடா, மஞ்சுநாத், ரவிகுமார் ஆகியோர் விலக வாய்ப்பு உள்ளது.
பழைய மைசூரு மண்டலத்தின், துமகூரின் துருவகெரே எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பாவுடன், காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
புதிய தலைவர்
ஜி.டி.தேவகவுடா மகன் ஹரிஷ்கவுடா ஹுன்சூர் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அவருடனும் பேச்சு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் கட்சியை விட்டு விலக மாட்டேன் என்று கூறி வருகிறார். தந்தை விலகும் பட்சத்தில் அவர் வழியில் மகனும், காங்கிரஸ் பக்கம் வரலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தால், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 13 ஆக குறைந்து விடும். அடுத்த சில மாதங்களில் மேலும் சிலரை இழுத்து அக்கட்சியை கூண்டோடு காலி செய்யும் முனைப்பில், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர்.
சென்னப்பட்டணா தொகுதியில் குமாரசாமி மகன் நிகில் தோற்று போனதில் இருந்து, கட்சி தொண்டர்கள் புத்துணர்ச்சி இழந்து உள்ளனர்.
கட்சியின் தலைவராக இருக்கும் குமாரசாமியும், மத்திய அமைச்சர் ஆகிவிட்டதால் அவரால் கட்சி பணிகளில் முன்பு போல கவனம் செலுத்த முடியவில்லை.
இதனால் புதிய தலைவரை தேர்வு செய்து, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.