வங்கி கணக்குகளை முடக்கிய விவகாரம்: காங்கிரசின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு
வங்கி கணக்குகளை முடக்கிய விவகாரம்: காங்கிரசின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு
ADDED : மார் 08, 2024 05:45 PM

புதுடில்லி: வருமான வரித்துறை சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கிய விவகாரத்தில், தீர்ப்பாயத்தை நாடிய காங்கிரஸ், மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை தீர்ப்பாயம் தற்போது நிராகரித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகள் கடந்த பிப்.,16ம் தேதி வருமான வரித்துறையால் முடக்கப்பட்டன. 2018-19ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால் வங்கிக் கணக்குகளை முடக்கியதுடன் ரூ.210 கோடி அபராதமும் வருமான வரித்துறை விதித்தது. இந்த முடக்கத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.
இது தொடர்பாக வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி முறையிட்டது. அதன்பிறகு முடக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் விடுவிக்கப்பட்டன. இந்த நிலையில் தீர்ப்பாயத்தில் வருமான வரித்துறையின் நடவடிக்கையை நிறுத்தக்கோரி காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

