சிறந்த நிர்வாகத்திற்காக குஜராத்தில் பயிற்சி: ராஜஸ்தான் அரசை வறுக்கும் காங்கிரஸ்
சிறந்த நிர்வாகத்திற்காக குஜராத்தில் பயிற்சி: ராஜஸ்தான் அரசை வறுக்கும் காங்கிரஸ்
ADDED : மே 07, 2025 01:25 AM

சிறந்த நிர்வாகம் தொடர்பாக, ராஜஸ்தான் அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு குஜராத்தில் பயிற்சி முகாம் நடக்கிறது. இது தொடர்பாக ராஜஸ்தான் அரசுக்கு, காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. முதல்வர், அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, பா.ஜ., தலைமை சார்பில், குஜராத்தில் மூன்று நாள் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி முகாம்
நேற்று முன்தினம் துவங்கிய இந்த பயிற்சி முகாமை கட்சித் தலைவர் நட்டா துவக்கி வைத்தார்.
இன்று நடக்கும் இறுதி நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேச உள்ளார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர், அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இதில் பங்கேற்க சென்றுள்ளது தொடர்பாக காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் கூறியுள்ளதாவது:
கட்சியின் கொள்கைகள் உள்ளிட்டவை தொடர்பாகவும், சிறந்த நிர்வாகத்துக்காகவும் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள நிலையில், தற்போது இதற்கு என்ன அவசியம்?
அப்படியானால், இந்த ஆட்சியின் நிர்வாகம் சரியில்லை என்று பா.ஜ., தலைமை நினைக்கிறதா; ராஜஸ்தானிலேயே ஏன் நடத்தக் கூடாது. குஜராத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன?
பா.ஜ., விலைக்கு வாங்க முயன்றபோது, எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை வேறு மாநிலத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று. ஆனால், தற்போது ஒட்டுமொத்த ராஜஸ்தான் அரசும், பயிற்சி என்ற பெயரில் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட நான்கு நாட்கள் முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் இல்லாத நிலையில், அரசு நிர்வாகம் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பரிசோதிப்பது நல்லது
“குடிநீர், மின்சார தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நேரத்தில், ஒட்டுமொத்த அரசும், குஜராத்துக்கு சென்றுள்ளது.
''இதில் சிறந்த நிர்வாகம் என்ற பயிற்சி வேறு அவர்களுக்கு அளிக்கப்படுவது கேலியாக உள்ளது,” என, ராஜஸ்தான் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் டீக்கா ராம் கூறியுள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் பஜன் லால் சர்மா கூறுகையில், “ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்கும் சர்தார் வல்லபபாய் படேலின் சிலை அமைந்துள்ள குஜராத்தின் கேவாடியாவில் பயிற்சி நடக்கிறது. இதில் என்ன தவறு உள்ளது.
''அசோக் கெலாட் தன் மனநல ஆரோக்கியத்தை பரிசோதித்து கொள்வது நல்லது,” என, குறிப்பிட்டுள்ளார்
- நமது சிறப்பு நிருபர் -.