அமைச்சரவை மாற்றி அமைக்கும்படி காங்., --- எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடி
அமைச்சரவை மாற்றி அமைக்கும்படி காங்., --- எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடி
ADDED : நவ 17, 2024 11:04 PM
பெங்களூரு: அமைச்சரவையை மாற்றி அமைத்து தங்களுக்கு அமைச்சர் பதவி கொடுங்கள் என்று, முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அரசு அமைந்த போது மூத்த எம்.எல்.ஏ.,க்களை புறக்கணித்துவிட்டு, இரண்டு, மூன்று முறை வெற்றி பெற்ற பெரும்பாலானோருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
இதனால் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் கோபம் அடைந்தனர். அமைச்சர்கள், தங்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு கூறினார். இந்நிலையில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் லோக்சபா தேர்தலில் காங்கிரசால் வெறும் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த மேலிடம், சரியாக செயல்படாத அமைச்சர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று விரும்பியது. இதை தொடர்ந்து சரியாக செயல்படாத அமைச்சர்களின் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் ஏழு பேரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று, மேலிடம் குறிப்பு கொடுத்தது. ஆனால் முதல்வர் சித்தராமையா, அமைச்சரவையை மாற்றி அமைப்பதை சில மாதங்கள் தள்ளி போடலாம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் சரியாக செயல்படாத அமைச்சர்களை நீக்கிவிட்டு தங்களுக்கு அமைச்சர் பதவி கொடுங்கள் என்று, காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
மாகடி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கூறுகையில், ''பொதுவாக அரசு அமைந்ததும் ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு பின், அமைச்சரவையில் மாற்றம் நடப்பது சகஜம் தான்.
அரசு அமைந்து இப்போது ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர் பதவி எதிர்பார்க்கின்றனர். இதில் தவறில்லை.
''எனக்கும் அமைச்சர் பதவி மீது ஆசை உள்ளது. ஐந்து முறை எம்.எல்.ஏ., ஆகி உள்ளேன். அதுவும் மூன்று கட்சிகளில் இருந்து. அமைச்சராகும் அனைத்து தகுதியும் எனக்கு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.