முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கும் காங்.,: நட்டா விமர்சனம்
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கும் காங்.,: நட்டா விமர்சனம்
UPDATED : மே 03, 2024 05:03 PM
ADDED : மே 03, 2024 04:51 PM

ஆமதாபாத்: ''முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்பை மாற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு மாற்ற முயற்சிப்பது நமது அரசியல் சாசனத்தை சூறையாடுவதற்கு சமம்'' என பா.ஜ., தலைவர் நட்டா கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் தாஹோத் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ., தலைவர் நட்டா பேசியதாவது: சோனியா தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ராமர் கற்பனையானவர் என்றும், அவரது இருப்பை நிரூபிக்க வரலாற்று அல்லது அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை எனவும் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் அளித்தது. ராமர் கோயிலை கட்ட பல தடைகளை ஏற்படுத்தினர். ஆனால், பிரதமர் மோடி தடைகளை தகர்த்து, நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று ராமர் கோயில் கட்டினார்.
பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது, அடுத்த நாளே, ராகுல் அவர்களுக்கு ஆதரவாக ஜேஎன்யு.,க்குச் சென்றார். பயங்கரவாதி அப்சல் குருவை ஆதரித்த கும்பலுக்கு ஆதரவளித்தது மட்டுமல்லாமல், அக்கும்பலை சேர்ந்த ஒருவருக்கு (கன்னையா குமார்) காங்., சார்பில் வேட்பாளர் சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு
தேச விரோத சக்திகளுடன் இருக்கும் அவர்களுக்கு நீங்கள் ஓட்டளிக்க வேண்டுமா? முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்பை மாற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது. மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு வழங்கப்படாது, சமூக நீதிக்காக இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார். இதையே பிரதமர் மோடியும் தெளிவாக கூறியுள்ளார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு மாற்ற முயற்சிப்பது நமது அரசியல் சாசனத்தை சூறையாடுவதற்கு சமம். அவ்வாறு எதுவும் செய்ய மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க முடியுமா என பிரதமர் மோடி, காங்கிரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
வளர்ந்த இந்தியா
நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு வளர்ந்த இந்தியாவாக மாறிவருகிறது. முன்பெல்லாம் சாதி, மதம், ஓட்டு வங்கி என்ற பெயரில் அரசியல் நடத்தப்பட்டது. அதேபோல், அரசியல்வாதிகள் சமூக நலனுக்காக எதையும் செய்யாமல் வெவ்வேறு சாதிகளாகப் பிரித்து ஓட்டு வங்கியை உருவாக்கினர். ஆனால் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, இதுபோன்ற அரசியலுக்கு சவால் விடுத்து, வளர்ச்சி அரசியலை அறிமுகப்படுத்தினார்.
மோடியின் அரசியல் இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பா.ஜ.,வைத் தவிர, மற்ற எல்லாக் கட்சிகளும் பழங்குடியினரை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றன. பழங்குடியினரின் தலைவிதியை மாற்றியது பா.ஜ., தான். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை பிரதமர் மோடி நாட்டின் ஜனாதிபதியாக்கினார். இவ்வாறு அவர் பேசினார்.