தேவகவுடாவை கைது செய்ய காங்., முயற்சி; காங்கிரசை வெளுத்து வாங்கிய ரேவண்ணா
தேவகவுடாவை கைது செய்ய காங்., முயற்சி; காங்கிரசை வெளுத்து வாங்கிய ரேவண்ணா
ADDED : நவ 28, 2024 12:40 AM

பெங்களூரு: ''காங்கிரஸ் அரசு இருந்தபோது, ம.ஜ.த.,வின் ஜி.டி.தேவகவுடாவை கைது செய்ய முயற்சி நடந்தது. அதை குமாரசாமி தடுத்து நிறுத்தினார்,'' என, முன்னாள் அமைச்சர் ரேவண்ணா பகிரங்கப்படுத்தியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் 2018ல், காங்கிரஸ் அரசு இருந்தது. அப்போது ஜி.டி.தேவகவுடாவை கைது செய்ய முயற்சி நடந்தது. எங்களின் விசுவாசியான போலீஸ் அதிகாரி ஒருவர், போனில் தொடர்பு கொண்டு, ஜி.டி.தேவகவுடாவை கைது செய்ய, போலீஸ் அதிகாரிகள் தயாராவதாக கூறினார்.
எந்த வழக்கு
இதை அறிந்த குமாரசாமி, 'ஜி.டி.தேவகவுடா கொள்ளை அடித்தாரா?' என கேள்வி எழுப்பி போலீசாரை அடக்கினார். எந்த வழக்கில் அவரை கைது செய்ய முயற்சித்தனர் என்பதை இன்றைய ஆளுங்கட்சி காங்கிரசிடம் கேளுங்கள்.
குமாரசாமி தடுத்திருக்காவிட்டால், என்னை போன்று ஜி.டி.தேவகவுடாவும் சிறையில் இருந்திருப்பார். எந்த கடவுளின் முன்னாலும் இதை கூறுவேன். ஜி.டி.தேவகவுடாவின் மனதை மாற்ற எங்களுக்கு தெரியும்.
கடந்த 1989ல் நானும், தேவகவுடாவும் தோற்றோம். தேவகவுடாவின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிட்டது என்றனர். வெறும் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தேவகவுடா ஒரே ஆண்டில் எம்.பி.,யானார். ஏழு சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர்.
முடியாது
இச்சூழ்நிலையில், 1994ல் தேவகவுடா, ம.ஜ.த.,வை பலப்படுத்தி 117 தொகுதிகளை கைப்பற்றினார். மாநில முதல்வரானார். எங்கள் கட்சி, பல ஏற்றம், இறக்கங்களை கண்டுள்ளது. கட்சியை யாராலும் ஒழிக்க முடியாது.
தேசிய கட்சியான காங்கிரசுக்கு, இது போன்ற அவலநிலை வந்திருக்கக் கூடாது.
யோகேஸ்வரின் காலைப் பிடித்து, விமானத்தில் அழைத்து வந்து எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தலில் களமிறக்கி எம்.எல்.ஏ.,வாக்கினர். அவர் நன்றாக பணியாற்றட்டும்.
பதவி ஆசையா?
அன்றொரு நாள், ஒரு தலைவரின் வீட்டில் அமர்ந்திருந்தேன். ஐந்து எம்.எல்.ஏ.,க்களை அழைத்து வருகிறோம். உங்களை துணை முதல்வராக்குகிறோம் என்றனர்.
காலம் வரும்போது, அவர்களின் பெயரை பகிரங்கப்படுத்துவேன். எனக்கு பதவி ஆசை இருந்திருந்தால், அன்றே நான் துணை முதல்வராகி இருப்பேன்.
குமாரசாமியை போன்று, வலியை அனுபவித்த தலைவர் வேறு யாரும் இல்லை. 2007ல் எடியூரப்பாவும், குமாரசாமியும் ஒருங்கிணைந்து சென்றிருந்தால், இன்று காங்கிரசே இருந்திருக்காது.
சென்னப்பட்டணாவில் நிகில் தோற்றிருக்கலாம். வரும் நாட்களில் அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இத்துடன் அவரது அரசியல் எதிர்காலம் முடிந்துவிடாது. எனக்கும், குமாரசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை. எனக்கும், என் பிள்ளைகளுக்கும் குமாரசாமி, தேவகவுடா தான் எங்களின் தலைவர்கள்.
ஹாசனில் பொதுக்கூட்டம் நடத்தினால் நடத்தட்டும். நாங்கள் மக்களிடம் தலை வணங்கி ஆதரவு கேட்போம். அதிகாரம் கிடைத்தால் மக்களுக்கு சேவை செய்வோம். கிடைக்காவிட்டால் வீட்டில் இருப்போம்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது தேவகவுடா. அனைவருக்கும் ம.ஜ.த., நியாயம் கிடைக்க செய்தது. ஆனால் காங்கிரஸ் அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்லாமல், ஓட்டு வங்கி அரசியல் செய்து, சமுதாயத்தை உடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.