நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா ராகுல்?: கேரள எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா ராகுல்?: கேரள எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
UPDATED : ஏப் 24, 2024 11:50 AM
ADDED : ஏப் 24, 2024 09:02 AM

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவரா என எனக்கு சந்தேகமாக உள்ளது. அவரது டி.என்.ஏ., ஆய்வு செய்யப்பட வேண்டும் என கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ., பி.வி.அன்வர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் மொத்தமுள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்.,26) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனையடுத்து இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ஜ., ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மா.கம்யூ., - காங்கிரஸ் கட்சிகள் கேரளாவில் தனித்தே போட்டியிடுகின்றன. குறிப்பாக காங்., எம்.பி., ராகுலை எதிர்த்து வயநாடு தொகுதியில் இந்திய கம்யூ., பொதுச்செயலாளர் டி.ராஜா மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். இப்படி தேசிய அளவில் ஒரே கூட்டணியில் இருந்தும், கேரளாவில் எதிரும் புதிருமாக இருக்கும் இந்த கட்சிகள், மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் பிரசாரத்தில் பேசிய ராகுல், ''முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளபோது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?'' என விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ., பி.வி.அன்வர், ராகுலை கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், ''காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் இரண்டாம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா என எனக்கு சந்தேகமாக உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்'' என்று சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

