காங்கிரஸ் கடும் போட்டியை சந்திக்கும்: சொல்கிறார் வயநாடு பா.ஜ., வேட்பாளர்!
காங்கிரஸ் கடும் போட்டியை சந்திக்கும்: சொல்கிறார் வயநாடு பா.ஜ., வேட்பாளர்!
ADDED : அக் 20, 2024 03:49 PM

கோழிக்கோடு: 'வயநாடு லோக்சபா தொகுதியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்,' என பா.ஜ., வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் இன்று கூறினார்.
2024 பார்லிமென்ட் தேர்தலில் வயநாடு, ரேபரேலி இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராகுல், வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கு வரும் நவ.,13ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதில், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என நேற்று அக்கட்சி அறிவித்தது.
நவ்யா ஹரிதாஸ் கூறியதாவது:
ராகுல், ரேபரேலியில் வெற்றி கிடைத்த உடன் வயநாடு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். வயநாடு தொகுதியை கை விட்டுவிட்டார். அங்கு சில மாதங்களுக்கு முன் கடும் நிலச்சரிவு ஏற்பட்டபோது, தொகுதி உறுப்பினராக இருந்த ராகுல், பார்லிமென்டில் மக்கள் பிரச்னை குறித்து பேசவில்லை.
ஆகவே, மக்கள் கடும் எதிர்ப்பில் உள்ளனர். இந்நிலையில், எதிர்தரப்பில் போட்டியிடும் காங்கிரசும் அதன் வேட்பாளராகிய பிரியங்காவும் கடும் போட்டியை சந்தித்து ஆக வேண்டும். பிரியங்கா வெற்றி பெற்றால் இதே போன்ற நிலைதான் ஏற்படும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, வயநாடு மக்களை, எம்.பி.,யாக இருந்த ராகுல், அரிதாகவே சந்தித்துள்ளார். மக்களின் பிரச்னைகளை கேட்கவில்லை.
நான் கோழிக்கோடு மாநகராட்சியின் உறுப்பினராக இரண்டு முறை இருந்துள்ளேன். இது எனக்கு முதல் லோக்சபா தேர்தல்.
நான் வெற்றி பெற்றால் மக்கள் பணியை சிறப்பாக செய்வேன்.
இவ்வாறு நவ்யா ஹரிதாஸ் கூறினார்.