தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ்., ஆபீசை சூறையாடிய காங்., தொண்டர்கள்
தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ்., ஆபீசை சூறையாடிய காங்., தொண்டர்கள்
ADDED : நவ 02, 2025 11:56 PM
கம்மம்: தெலுங்கானாவில், பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி அலுவலகத்தை ஆளும் காங்., தொண்டர்கள் சூறையாடிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கம்மம் மாவட்டத்தில் உள்ள மனுகுரு என்ற பகுதியில், பிரதான எதிர்க்கட்சியான, முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதியின் உள்ளூர் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்துக்குள் நேற்று அதிரடியாக நுழைந்த காங்., தொண்டர்கள், அங்கிருந்த நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களை வெளியே வீசி, தீ வைத்து எரித்தனர். மேலும், பாரத் ராஷ்ட்ர சமிதி தொண்டர்களையும் தாக்கினர். இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இரு தரப்பையும் சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுப்படுத்தினர். அப்பகுதியில் கூடுதல் அளவில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் உதவியோடு குண்டர்களை அனுப்பி, அராஜகத்தில் ஆளும் காங்., ஈடுபடுவதாக பாரத் ராஷ்ட்ர சமிதி குற்றஞ்சாட்டி உள்ளது.

