முன்னாள் அமைச்சர் மகளுக்கு இரு இடங்களில் ஓட்டுரிமை காங்., குற்றச்சாட்டு நிரூபணம்
முன்னாள் அமைச்சர் மகளுக்கு இரு இடங்களில் ஓட்டுரிமை காங்., குற்றச்சாட்டு நிரூபணம்
ADDED : செப் 20, 2025 10:46 PM
மூணாறு:கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், உடும்பன்சோலை எம்.எல்.ஏ.,வுமான எம்.எம்.மணியின் மகள் சுமா இரட்டை ஓட்டுரிமை சிக்கலில் சிக்கினார்.
இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை தாலுகாவுக்கு உட்பட்ட ராஜாக்காடு, ராஜகுமாரி ஆகிய ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மின்துறை அமைச்சரும், உடும்பன்சோலை எம்.எல்.ஏ.,வுமான எம்.எம். மணியின் மகள் சுமாவுக்கு இரண்டு ஊராட்சிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளது தெரியவந்தது.
தற்போது மார்க்சிஸ்ட் கம்யூ., ராஜாக்காடு பகுதி செயலாளராக உள்ள சுமா, ராஜாக்காடு ஊராட்சியில் 5ம் வார்டில் கணவர் சுரேந்திரன் உட்பட குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு அவருக்கு ஓட்டு உள்ளது.
இதற்கு முன் ராஜகுமாரி ஊராட்சி தலைவராக இருந்தபோது அந்த ஊராட்சியில் முதல் வார்டில் வசித்தவருக்கு அதே வார்டில் ஓட்டுரிமை உள்ளது.தற்போது இரண்டு ஊராட்சிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது கண்டறியப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினரின் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியுள்ளது.
ராஜகுமாரி ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்குமாறு எழுத்துப் பூர்வமாக விண்ணப்பித்தும் ஊழியர்களின் அலட்சியத்தால் இரட்டை ஓட்டுரிமை பிரச்னை ஏற்பட்டுள்ளதாக சுமா தெரிவித்தார். தனது பேச்சால் எம்.எம்.மணி அவ்வப்போது சிக்கலில் சிக்கும் சூழலில் தற்போது அவரது மகள் சிக்கலில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.