ADDED : பிப் 12, 2024 06:35 AM
லோக்சபா தேர்தலில், பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க, காங்கிரஸ் திட்டம் வைத்து உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஐந்து வாக்குறுதி திட்டங்களால் 28 தொகுதிகளில் 20ல் வெற்றி பெறலாம் என்று, காங்கிரஸ் கணக்கு போட்டு வைத்திருந்தது.
ஆனால் வாக்குறுதி திட்டங்களை முறையாக செயல்படுத்தாததால், அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் 4 இடங்களில் மட்டுமே, வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இது காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.
இன்னும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர்கள் நினைத்து உள்ளனர். இதன் எதிரொலியாக, பெண் வேட்பாளர்களை சில தொகுதிகளில் நிறுத்த திட்டம் வைத்து உள்ளனர்.
இதன்படி தார்வாட் தொகுதியில் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னியின் மனைவி சிவலீலா, பெங்களூரு வடக்கில் குஸ்மா ஹனுமந்தராயப்பா, பெங்களூரு தெற்கில் சவுமியா ரெட்டி, பாகல்கோட்டில் வீணா காசப்பண்ணவர், பல்லாரியில் சவுபர்ணிகா.
மாண்டியாவில் அமைச்சர் செலுவராயசாமியின் மனைவி தனலட்சுமி அல்லது முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவின் மகள் சாம்பவி, பெலகாவியில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அல்லது அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்காவை நிறுத்த வாய்ப்பு இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பெண் வேட்பாளர்களை நிறுத்தி, சக்தி திட்டம், கிரஹ லட்சுமி திட்டத்தை சொல்லி, பெண்களின் ஓட்டுகளை பெறலாம் என்பதும், காங்கிரசின் கணக்காக உள்ளது.
- நமது நிருபர் -