ADDED : நவ 29, 2024 10:14 PM

புதுடில்லி: '' கட்சியினர் இடையே ஒற்றுமை இல்லாததும், ஒருவரை ஒருவர் விமர்சித்து அறிக்கை வெளியிடுவதுமே தேர்தல் தோல்விக்கு காரணம், '' என அக்கட்சியின் தலைவர் கார்கே கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டில்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், அக்கட்சி தலைவர் கார்கே துவக்க உரையாற்றியதாவது: தேர்தல்களில் கள நிலவரம் நமக்கு சாதகமாக இருந்தது. ஆனால், அது மட்டும் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை. கள நிலவரத்தை வெற்றியாக மாற்ற நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி செய்ய முடியாததற்கு என்ன காரணம் என்பதை கட்சி மறு ஆய்வு செய்ய வேண்டும்.
லோக்சபா தேர்ததலுக்கு பிறகு நடந்த நான்கு சட்டசபை தேர்தல்களில் இரண்டில் ' இண்டியா ' கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், அதில் காங்கிரசின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் நமக்கு ஒரு செய்தியை சொல்கிறது. அதில் நாம் பாடம் கற்றுக் கொண்டு, அமைப்பு ரீதியில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய வேண்டும்.
நமக்குள் ஒற்றுமை இல்லாததும், ஒருவரை ஒருவர் விமர்சித்து அறிக்கை வெளியிடுவதும் நம்மை பாதிக்கிறது. ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால், தேர்தலில் எப்படி எதிரிகளை வீழ்த்த முடியும். எனவே கட்டுப்பாட்டை அனைவரும் ஒற்றுமையாக கடைபிடிக்க வேண்டும். அனைத்து சூழ்நிலைகளிலும் நாம் ஒற்றுமையாக இருப்பது முக்கியம். காங்கிரசின் வெற்றி என்பது நமது வெற்றி. கட்சியின் தோல்வி என்பது நமது தோல்வி என்பதை அனைவரும் உணர வேண்டும். நமது பலம், கட்சியின் பலத்தில் தான் உள்ளது.
தேசிய பிரச்னைகள் மற்றும் தேசிய தலைவர்களை வைத்து எத்தனை நாட்கள் நாம் மாநில தேர்தல்களை சந்திக்க முடியும். உள்ளூர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கு ஏற்றவாறு திட்டங்களை செயல்படுத்துவது முக்கியம். தேர்தல் பணிகளை, தேர்தல் நடப்பதற்கு ஒராண்டுக்கு முன்னரே துவக்க வேண்டும். கட்சியின் ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கார்கே கூறினார்.

