என்னை எதிர்ப்பது மட்டுமே காங்கிரசின் ஒரே திட்டம்: பிரதமர் மோடி
என்னை எதிர்ப்பது மட்டுமே காங்கிரசின் ஒரே திட்டம்: பிரதமர் மோடி
ADDED : பிப் 16, 2024 01:29 PM

புதுடில்லி: மோடியை எதிர்ப்பது என்ற ஒரே திட்டத்தை மட்டுமே காங்கிரஸ் வைத்துள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி 'விக்சித் பாரத் விக்சித் ராஜஸ்தான்' நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்று, ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:
இந்தியா தற்போது நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. 2014க்கு முன்பு, ஊழல்கள் மற்றும் குண்டுவெடிப்புகள் பற்றிய விவாதங்கள் மட்டுமே இருந்தன. இந்திய மக்கள் தங்களுக்கும் நாட்டிற்கும் என்ன நேரிடுமோ என்று நினைத்திருந்தனர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த சூழல் தான் நிலவியது.
காங்கிரஸ்
ராஜஸ்தானில் கடந்த ஆட்சியின்போது, வினாத்தாள் கசிவால் பல இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். இதனை விசாரிக்க, பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் குழு உருவாக்கப்பட்டது. வினாத்தாள் கசிவுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டத்தை உருவாக்கியுள்ளது. மோடியை திட்டுவது என்ற ஒன்றை மட்டுமே காங்கிரஸ் திட்டமாக வைத்துள்ளது. அவர்கள் 'மேட் இன் இந்தியா' மற்றும் 'உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்பது' போன்றவற்றை ஆதரிக்க மாட்டார்கள். ஏனெனில், அவற்றையெல்லாம் மோடி ஆதரிக்கிறார்.
மோடி என்ன செய்தாலும் அதற்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும் என காங்., செயல்படுகிறது. மோடி எதிர்ப்பு என்ற ஒன்றே அவர்களின் திட்டம். இன்றைக்கு ஒவ்வொருவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அதில் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.