ADDED : ஜன 19, 2025 06:57 AM

ஹூப்பள்ளி: ''அரசியலமைப்பை பாதுகாப்பது காங்கிரஸ் மாநாட்டின் நோக்கம்,'' என, துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.
பெலகாவியில் வரும் 21ம் தேதி காங்கிரஸ் மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக வட மாவட்டத்தின் முக்கிய நகரமான ஹூப்பள்ளியில் நேற்று காங்கிரஸ் கூட்டம் நடந்தது.
துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, அமைச்சர் சந்தோஷ் லாட் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
புதிய செய்தி
கூட்டத்தில் சிவகுமார் பேசியதாவது:
ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியலமைப்பு என்ற பெயரில் பெலகாவியில் காங்கிரஸ் மாநாடு நடத்துகிறோம். இம்மாநாட்டின் மூலம், நாட்டிற்கு புதிய செய்தி அனுப்பப்படும்.
அரசியலமைப்பை பாதுகாப்பது மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் அனைத்து வகுப்பினருக்கும் சம உரிமை கிடைக்கும்.
மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்து சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார். 1924ல் பெலகாவியில் நடந்த மாநாட்டில் காந்தி பேசினார்.
பாக்யம்
காந்தி காங்கிரஸ் தலைவரான பிறகு நாடு சுதந்திரம் பெற்றது. தேசியக்கொடி, தேசிய கீதம் கிடைத்தது. இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்பில் சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோம்.
தற்போது பெலகாவியில் காங்கிரஸ் மாநாடு நடத்துவது நமக்கு கிடைத்த பாக்யம். இதற்கான பொறுப்பை அமைச்சர் எச்.கே.பாட்டீலிடம் கொடுத்துள்ளோம். தார்வாட் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், கட்சி மாநாட்டிற்கு தொண்டர்களை அதிக அளவில் திரட்டி அழைத்து வருவர். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.
முன்னோடி
மாநிலத்தில் நுாறு காங்கிரஸ் அலுவலகங்கள் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்த அம்பேத்கரை பா.ஜ., அவமதித்துள்ளது. அவரது மாண்பை காப்பாற்றவும், அடுத்த தலைமுறைக்கு அரசியலமைப்பை கொண்டு செல்லும் வகையிலும் மாநாடு நடத்தப்படுகிறது.
மாநாட்டிற்கு ஆட்களை சேர்ப்பது, எங்களுக்கு பெரிய விஷயம் இல்லை. ஆனால் வட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை.
இது உங்களுக்கான மாநாடு. இது போன்ற வரலாற்று மாநாடுகளை மீண்டும் பார்க்க முடியாது. இந்த மாநாடு அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.