மோசடி பெண்ணுடன் தொடர்பு? பவித்ராவின் தோழி விளக்கம்
மோசடி பெண்ணுடன் தொடர்பு? பவித்ராவின் தோழி விளக்கம்
ADDED : டிச 27, 2024 05:43 AM

பெங்களூரு: ''நகைக்கடையில் மோசடி செய்த பெண்ணுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை,'' என்று, பவித்ரா தோழி சமதா விளக்கம் அளித்து உள்ளார்.
பா.ஜ., முன்னாள் அமைச்சர் வர்த்துார் பிரகாஷ் பெயரை பயன்படுத்தி, பெங்களூரில் நகைக்கடையில் நகை வாங்கி, 2.42 கோடி ரூபாய் மோசடி செய்த, ஸ்வேதா கவுடா என்பவரை, கமர்ஷியல் தெரு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில், வர்த்துார் பிரகாஷிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதான பவித்ரா, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த போது, அவரை பார்க்க தோழி சமதா வந்திருந்தார்.
சிறையில் இருந்து சமதா வெளியே வந்த போது, அவருடன் ஸ்வேதாவும் பேசி கொண்டு வரும் வீடியோக்கள் நேற்று முன்தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்வேதாவும், சமதாவும் தோழிகள் என்றும் கூறப்பட்டது.
இது குறித்து நேற்று சமதா கூறியதாவது:
ஸ்வேதாவுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிறையில் பவித்ராவை நான் பார்க்க சென்ற போது, ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் இருந்த வினயை, பார்க்க ஸ்வேதா வந்திருந்தார்.
சிறையில் இருந்து வெளியே வரும்போது, என்னுடன் சேர்ந்து நடந்து வந்தார்.
அப்போது என்னிடம் ஏதோ பேசி கொண்டு வந்தார். நான் அவருக்கு பதில் அளித்தேன். அவ்வளவு தான். இதுதவிர எங்களுக்குள் ஒன்றும் இல்லை. அதன்பின், நான் அவரை பார்க்க கூட இல்லை.
பவித்ராவுக்கு ஆபாச குறுந்தகவல் வந்த போது, அவருக்கு நான் பல முறை ஆறுதல் கூறினேன். சிறையில் இருந்து வெளியே வந்த பின் அவரை சந்திக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

