கோர்ட்டை கவனியுங்கள்; கேன்டீனுக்கு போகாமல் நூலகத்துக்குச் செல்லுங்கள்; இளம் வக்கீல்களுக்கு அறிவுரை
கோர்ட்டை கவனியுங்கள்; கேன்டீனுக்கு போகாமல் நூலகத்துக்குச் செல்லுங்கள்; இளம் வக்கீல்களுக்கு அறிவுரை
ADDED : செப் 15, 2024 01:34 PM

புதுடில்லி: ''வேலை எதுவும் இல்லை என்றால் வீட்டில் இருக்காதீர்கள். கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணைகளை கவனியுங்கள். கேண்டீன் போகாமல் நூலகத்திற்குச் செல்லுங்கள்,'' என்று, இளம் வக்கீல்களுக்கு ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹிமா கோஹ்லி அறிவுரை வழங்கினார்.
ஹிமா கோஹ்லி சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் 9வது பெண் நீதிபதியாக பதவி வகித்தவர்.டில்லி ஐகோர்ட்டில் முதல் பெண் நீதிபதியாக பதவி வகித்தவர். இவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார்.
நீதித்துறையில் பெண்களுக்கு உள்ள சவால்கள் குறித்து ஹிமா கோஹ்லி மேலும் கூறியதாவது: கடந்த 1980ம் ஆண்டுகளில் நீதித்துறையில் பெண்கள் பணியாற்றுவதில் மிகுந்த சிக்கல்கள் இருந்தன. பெண் நீதிபதிகள் அதற்காக கடுமையாக இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது.பல சவால்கள் இருந்தாலும் குடும்பம் மற்றும் குழந்தைகளை நன்கு கவனித்து வந்தேன். கிரிமினல் குற்ற வழக்குகளை கையாளுவதில் பெண் வக்கீல்களுக்கு பல சிக்கல்கள் இருக்கின்றன. முதல் முறையாக வக்கீலாக பணியாற்ற வரும் பெண்கள் மிகுந்த சவால்களை சந்திக்கின்றனர்.
ஒரு பெண், வக்கீலாக பணியாற்ற முன்வருவதே சவாலான விஷயம். அதிலும் அவர், வக்கீல் பணியில் இருந்து நீதிபதி பணிக்கு செல்வது என்பது அவ்வளவு எளிதாக நடப்பதில்லை.
பெண் நீதிபதிகள், குடும்ப நீதிமன்றங்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களில் மட்டும் தான் பணியாற்ற வேண்டுமா? மற்ற நீதிமன்றங்களிலும் பெண் நீதிபதிகளை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.