சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் விபத்தில் சதியா?: வெடி சத்தம் கேட்டதாக டிரைவர் வாக்குமூலம்
சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் விபத்தில் சதியா?: வெடி சத்தம் கேட்டதாக டிரைவர் வாக்குமூலம்
ADDED : ஜூலை 19, 2024 01:10 AM

கோண்டா: சண்டிகரில் இருந்து அசாமின் திப்ருகர் நோக்கி சென்று கொண்டிருந்த பயணியர் ரயிலின் எட்டு பெட்டிகள், உத்தர பிரதேசத்தின் கோண்டா அருகே நேற்று தடம் புரண்டன. இதில் இருவர் உயிரிழந்தார்; 35 பேர் காயம் அடைந்தனர். ரயில் தடம் புரள்வதற்கு முன், வெடி சத்தம் கேட்டதாக ரயில் டிரைவர் தெரிவித்தார். இதில், நாசவேலை ஏதும் உள்ளதா என, ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
யூனியன் பிரதேசமான சண்டிகரில் இருந்து, அசாமின் திப்ருகர் நோக்கி, சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது.
உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து 150 கி.மீ., தொலைவில் உள்ள கோண்டா சந்திப்பு அருகே நேற்று மதியம் 2:37 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது, திடீரென ரயில் தடம் புரண்டது.
மொத்தமுள்ள 23 பெட்டிகளில் எட்டு பெட்டிகள் தடம் புரண்டன. சில பெட்டிகள் பக்கவாட்டில் கவிழ்ந்தன. அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பயணியர் அதிர்ச்சியில் கதறினர். அந்த இடமே களேபரமாக காட்சி அளித்தது. உயிரிழந்தோர் எண்ணிக்கையில் முதலில் குழப்பம் நிலவியது.
உ.பி., துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கூறுகையில், நான்கு பயணியர் உயிரிழந்ததாக தெரிவித்தார். அதை, கலெக்டர் நேஹா சர்மாவும் உறுதி செய்தார்.
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார். மீட்புப் பணிகள் துவங்கிய சில மணி நேரங்களுக்கு பின், விபத்தில் இருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது; மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது. 35 பயணியர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
மீட்புப் படையினர் விபத்து நடந்த இடத்தை அடைவதற்குள், தடம் புரண்ட ரயிலில் இருந்தவர்கள் தங்கள் உடைமைகளுடன் வெளியேறி தண்டவாளம் அருகே அமர்ந்திருந்தனர்.
முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு 40 பேர் அடங்கிய மருத்துவக் குழுவும், 15 ஆம்புலன்சும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன.
மத்திய அமைச்சரும், உள்ளூர் எம்.பி.,யுமான கீர்த்திவர்தன் சிங் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். பயணியருக்கு கோரக்பூரில் இருந்து மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், மங்காபுரில் இருந்து அந்த ரயில் புறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து மங்காபுர் அழைத்து செல்ல பஸ் வசதி செய்யப்பட்டது. விபத்து குறித்து ரயில்வே தொழில்நுட்பக் குழு விசாரணை மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் கீர்த்திவர்தன் தெரிவித்தார்.
விபத்து நடப்பதற்கு முன், பலத்த வெடி சத்தம் கேட்டதாகவும், அதன் பின் ரயில் தடம் புரண்டதாகவும் ரயில் டிரைவர் தெரிவித்தார். எனவே, இதில் சதி வேலை உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருந்துவ சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், படுகாயம் அடைந்தோருக்கு 2.50 லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாயும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.