இரும்பு கம்பிகளை வைத்து பஞ்சாபில் ரயிலை கவிழ்க்க சதி
இரும்பு கம்பிகளை வைத்து பஞ்சாபில் ரயிலை கவிழ்க்க சதி
ADDED : செப் 23, 2024 11:52 PM

சண்டிகர் : பஞ்சாபில் ரயிலை கவிழ்க்கும் நோக்கில், தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளை, மர்ம நபர்கள் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதிந்தா நகரில் இருந்து ஹரியானாவின் கோரி ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் சரக்கு ரயில் சென்றது.
சதிச்செயல்கள்
அப்போது பாங்கி நகர் அருகே சென்றபோது, தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் கிடப்பதை பார்த்து ரயில் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக ரயிலை நிறுத்திய அவர், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், தண்டவாளத்தில் கிடந்த ஒன்பது இரும்பு கம்பிகளை அகற்றினர்.
இதன் காரணமாக, 40 நிமிடங்கள் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் ரயில்களை கவிழ்ப்பதற்காக தண்டவாளங்களில் சிலிண்டர்கள், டெட்டனேட்டர்கள், இரும்பு கம்பங்கள் போன்றவை வைத்த சதிச்செயல்கள் அரங்கேறின.
எனினும், சரியான நேரத்தில் இதை முன்கூட்டியே கண்டுபிடித்ததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.
பிடிபட்ட ரயில்வே ஊழியர்
ஜம்மு -- காஷ்மீரில் இருந்து கர்நாடகாவுக்கு ராணுவ வீரர்களுடன் சிறப்பு ரயில் சமீபத்தில் சென்றது; இது, மத்திய பிரதேசத்தில் சென்றபோது, தண்டவாளத்தில் வைக்கப்பட்ட டெட்டனேட்டர்கள் திடீரென வெடித்தன.
ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து, ரயில் தண்டவாள பராமரிப்பு ஊழியர் சமீர் என்பவரை பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது அவர், ரயில் தண்டவாளத்தில் டெட்டனேட்டர்களை தவறுதலாக வெடிக்க செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதுபோன்ற டெட்டனேட்டர்களை, ரயில்வே துறையினர் பனிக்காலங்களில் பயன்படுத்துவது வழக்கம்.அப்போது, ரயில் சிக்னல்கள் தெரியாததால், இவற்றை பயன்படுத்தி ரயில்களுக்கு சமிக்ஞை அளிப்பர்.ஆனால், ரயில்வே ஊழியர் சபீர், சம்பவத்தின் போது மது போதையில் இருந்ததாக தெரிகிறது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.